எடப்பாடி பயந்துவிட்டாரா அல்லது ராஜதந்திரமா?

ஸ்பீடு எடுக்கும் ராமதாஸ்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மலை போன்று நம்பியிருக்கிறார். ஆகவே, இந்த தேர்தலில் எப்படியும் ஜெயித்தே தீரவேண்டும் என்று எடப்பாடிக்கு தூது அனுப்பி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள்.

இது குறித்து பா.ம.க. வட்டாரத்தில், ‘விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்குக் காரணம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமகவை கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்பதுதான். செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு வட மாவட்டங்களில் அதிமுக என்பது இன்னொரு பாமகவாகி விட்டது. அதன் விளைவே இந்த முடிவு!

விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது திமுக பாமக என்று நேரடி மோதல் வந்துவிட்டது. அதிமுக களத்தைவிட்டு ஒதுங்கியதால் திமுக பாமக நேரடி மோதலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாமகவிற்கு வாக்களிப்பார்கள் என்று திமுக பயப்படுகிறது ஏற்கனவே பாமகவிற்கு இந்த தொகுதியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. பாமகவின் கூட்டணி கட்சிகள் உடைய செல்வாக்கும் தற்போது கூடியிருக்கிறது,

2016 இல் பாமக தனித்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது பாமகவின் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. இருமுனை போட்டியாக இந்த தேர்தல் செல்வதால் பாமகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதன் காரணமாகவே திமுகவினர் பாமகவின் மீது நேரடியாக தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள் சமூக வலைதளத்தில். பாமகவினர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் களப்பணியை தொடங்கி திமுகவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்’ என்று குஷியாக இருக்கிறார்கள்.

அதேநேரம், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், ‘’விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. அப்படி ஒரு வேலை திமுகவின் கடும் அராஜகத்தால் திமுக வெற்றி பெற்றாலும் கூட இரண்டாம் இடமும் திமுகவிற்கு எதிரான மாற்றுக் கட்சி அதிமுக தான் என்பதை நிலை நிறுத்தி இருக்கலாம். * இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதன் மூலமாக எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தையும், எதிர்க்கட்சி அரசியலையும் விட்டுக் கொடுத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி’’ என்று வருந்துகிறார்கள்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையை ராஜதந்திரம் என்று வர்ணிக்கும் அவரது ஆதரவாளர்கள், ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில். திமுக - 72 ஆயிரம் வாக்குகள், அதிமுக - 65 ஆயிரம்,. பாமக - 32 ஆயிரம். எனவே யாருக்கும் பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்துல அண்ணா தி மு க இல்லை , ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அதே அளவிலான வாக்குகளை பெறுகிறதா என்பது இப்பொழுது கேள்வியாகும். எடப்பாடி போட்டியிடாத ரகசியத்தின் பெருமை பின்னால் தான் தெரியவரும்’’ என்கிறார்கள்.

அப்படின்னா, 2026 தேர்தலில் இரண்டு முனை போட்டின்னு சொல்லுங்க.