என் படுக்கை அறையில் மூன்றாவது ஆள்

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்


எத்தனை பெரிய செல்வந்தர் என்றாலும் பணத்தை அசட்டையாக எல்லா இடங்களிலும் வைத்துவிடுவதில்லை. பிறர் பார்வையில் படாதவகையில், பாதுகாப்பான இடத்தில் தான் வைத்திருப்பார்கள். தாம்பத்திய உறவும் பணம் போன்று பிறருக்குத் தெரியாமல் பாதுகாக்க வேண்டிய செயல் தான் என்பதை சொல்லும் கவுன்சிலிங் சம்பவம் இது.

ஆன்லைன் கவுன்சிலிங்கில் குணா பேசத் தொடங்கினார். ‘’ஐ.டி.யில் நல்ல சம்பளம் வருகிறது. கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. மனைவி சுகந்தி நல்ல வசதியான குடும்பம். அவர் மாஸ்டர் டிகிரி படித்திருக்கிறார். வீட்டிலிருந்த படி பியூட்டிசியன்களுக்கான பொருட்களை விற்பனை செய்கிறார். அவருக்கும் நல்ல வருமானம் வருகிறது.

நாலைந்து வருடங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே பேசி முடிவு எடுத்துவிட்டோம். நாங்கள் தனியே வசிக்கிறோம். ஆரம்பத்தில் எங்களுக்கு இடையில் நல்ல தாம்பத்திய உறவு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அது போரடித்துவிட்டது. அதனால் இருவரும் பாலியல் வீடியோக்கள் பார்க்கத் தொடங்கினோம். இப்போது தினமும் அந்த வீடியோக்கள் பார்த்தே உறவு கொள்கிறோம். இது மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அதேநேரம், இன்னொரு ஆசை வந்திருக்கிறது. எங்களுடன் இன்னொரு நபரும் இந்த செக்ஸ் விளையாட்டில் கலந்துகொண்டால் இன்னமும் மகிழ்ச்சியாகவும் திரில்லிங் அனுபவமாகவும் இருக்கும் என்று தோன்றியது. என்னுடைய ஆசைக்கு ஆரம்பத்தில் சுகந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அது போன்ற த்ரிசம் எனப்படும் மூன்று நபர்கள் கலந்துகொள்ளும் பாலியல் வீடியோக்கள் அதிகம் பார்த்த பிறகு, ஒரே ஒரு நாள் என்றால் தப்பில்லை என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார்.

வேறு ஒரு ஊரில், முகம் தெரியாத ஒரு நபரை மூன்றாவது பார்ட்னராக சேர்த்துக்கொள்வதற்குத் திட்டம் போட்டிருக்கிறோம். அதேநேரம் எங்களுக்குள் ஒரு இனம் தெரியாத பயமும் குற்றவுணர்ச்சியும் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஒரு சரியான முடிவு எடுப்பதற்கு நீங்கள் உதவ வேண்டும்…’’ என்று கேட்டுக்கொண்டார்.

’’உங்கள் மனைவி அருகில் இருந்தால் அவரும் இந்த மீட்டிங்கில் கலந்துகொள்வது நல்லது. அவரிடம் நான் எதுவும் பேசப்போவதில்லை என்றாலும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்’’ என்றதும் சுகந்தியும் அருகில் இருப்பதாகக் கூறினார். நான் பேசுவதை ஸ்பீக்கரில் போட்டு கேட்பதாகக் கூறினார்.

‘’கடைசியாக நீங்கள் இருவரும் சேர்ந்து சினிமா தியேட்டருக்குப் போய் என்ன படம் பார்த்தீர்கள்..?’’

‘’ஹோம் தியேட்டர் விருப்பதால் சினிமா தியேட்டருக்கு அதிகம் செல்வதில்லை. மலையாளத்தில் வெளியாஅ மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பற்றி நிறைய பேர் பாராட்டிப் பேசியதால் அந்த படத்துக்குப் போனோம். சுகந்தி விஜய் ரசிகை என்பதால் கில்லி படம் மீண்டும் ரீலீஸ் ஆனதும் தியேட்டரில் போய் பார்த்தோம்…’’

‘’அடுத்து நீங்கள் கொடைக்கானல் போவதாக இருந்தால் அந்த குணா குகைக்குப் போவீர்களா..?’’

‘’அதை அடைத்துவிட்டார்களே..?’’

‘’சட்டப்படி அடைக்கப்பட்டிருக்கிறது. அங்கேயிருக்கும் கைடு ஒருவர் கூட்டிச் செல்கிறார் என்றால் அவருடன் சேர்ந்து போவீர்களா..?’’

‘’அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டோம்’’

‘’சரி, கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டரான முத்துப்பாண்டி போலவே ஒரு ரவுடியும் அவனது கும்பலும் சேர்ந்து ஒரு பெண்ணை விரட்டி வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுப்பீர்களா..?’’

‘’அதெல்லாம் சினிமாவுக்குத் தான் சரியா இருக்கும் சார்… நிஜ வாழ்க்கையில் வம்பை விலைக்கு வாங்க முடியாது’’

‘’சரியாகச் சொன்னீர்கள். சினிமா வேறு நிஜம் வேறு என்பதை தெளிவாக உணர்ந்து இருக்கிறீர்கள். இது நல்ல விஷயம். அதேபோல், தினமும் நீங்கள் பார்க்கும் பாலியல் படங்களும் சினிமா தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதில் நடிக்கும் அத்தனை பேரும் நடிகர்கள். அங்கே நீங்கள் பார்ப்பது எதுவுமே நிஜம் இல்லை.

.World Wrestling Entertainment (WWE) எனப்படும் ஆக்ரோஷமான ரெஸ்ட்லிங் போட்டியை சின்னப் பிள்ளையில் பார்த்து ரசித்திருப்பீர்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு இவை எல்லாமே செட்டப் செய்யப்பட்ட போட்டிகள், அடிதடி எல்லாமே நிஜம் இல்லை என்பது தெரிந்திருக்கும். எனவே, நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் யாருடனும் மோதி ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள்.

பாலியல் வீடியோ என்பது கோடியில் பணம் கொட்டும் ஒரு மிகப்பெரிய மார்க்கெட். எனவே, அதில் விதவிதமாக, புதிது புதிதாக, ரோட்டில், காட்டில், நீச்சல் குளத்தில் என்று பல்வேறு லொகேஷன்களில் சூட்டிங் எடுத்து எல்லாமே நிஜம் போன்று காட்டுவார்கள்.

அந்த வீடியோக்களில் காட்டப்படும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் நீளம், அகலம் எல்லாமே பொய்யாக மிகைப்படுத்தப்பட்டவை. ஆகவே, அவற்றை பாருங்கள், ரசியுங்கள். எப்படி மஞ்சும்மல் பாய்ஸ், கில்லி படத்தைப் பார்த்து ரசித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டீர்களோ, அதேபோல் படுக்கையறையிலே அந்த காட்சிகளை ரசித்து விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுங்கள்…’’

‘’ஆனால், என் நண்பர்கள் சிலர் புதிதாக முயற்சி செய்து அதில் கூடுதல் இன்பம் கிடைப்பதாகச் சொல்கிறார்களே…’’

‘’மது கொஞ்சமாகக் குடித்தால் கொஞ்சம் கிக் இருக்கும். அதிகம் குடித்தால் அதிகம் கிக் இருக்கும் என்பதல்ல. அதிகம் குடித்தால் நிலை தடுமாறிவிடும். என்ன நடக்கிறது என்று புரியாத நிலைக்கு மாறிவிடுவீர்கள். எனவே, மூன்றாவது ஒரு நபர் உங்கள் படுக்கையறைக்கு வருவது சில மணி நேரங்கள் நன்றாக இருக்கலாம். ஆனால், இது மது போதையைப் போன்று மாறிவிடும். தினமும் கிடைத்தால் நல்லது என்று தோன்றும். அது, தொடர்கதை ஆகிவிடும்.

மூன்றாவது நபர், நான்காவது நபர், ஐந்தாவது நபர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அடுத்தடுத்து ஆசை வரும். பிறருக்கு இதுவெல்லாம் தெரியக்கூடாது என்று அச்சப்படும் நீங்களே, ஒரு கட்டத்தில் யாருக்குத் தெரிந்தால் நமக்கு என்ன என்ற நிலைக்கு வந்துவிடலாம்.

இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், கணவன், மனைவிக்கு இடையிலான அன்பும், நம்பிக்கையும் உடைந்துவிடும். குறிப்பாக பெண் மீது அதிகம் குற்றம் சுமத்தப்படும். அவர் களங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுவார். அந்த சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கும். ஒருவரையொருவர் குற்றம் சொல்லத் தொடங்குவீர்கள். யார் ஆரம்பித்தது, யார் முடித்தது என்று தெரியாமல் குடும்பம் உருக்குலைந்து போய்விடும்.

அந்த மூன்றாவது நபருக்கு வெளியே தெரியாத பாலியல் நோய் இருந்தால் நீங்கள் இரண்டு பேர் மட்டுமின்றி, நாளை பிறக்கப்போகும் உங்கள் பிள்ளையும் பாதிக்கப்படலாம். மூன்றாவது நபர் ஒரு பிளாக் மெயில் ஆசாமியாக இருந்தால் நீங்கள் நிறைய பணத்தையும் நிம்மதியையும் இழக்க வேண்டி வரலாம்.

தப்பான கனவு கண்டால் அதை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள். அதுபோல் நீங்கள் ஒரு தப்பான கனவு காண்கிறீர்கள். இந்த கனவை நனவாக்க நினைக்காதீர்கள். நிஜ உலகில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழுங்கள். படுக்கையறையில் நீங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அது உங்கள் இருவருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வேறு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா’’ என்று கேட்டேன்.

இருவரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அதன் பிறகு குணா போன் செய்யவும் இல்லை.

சினிமாவை பார்த்து நிஜ வாழ்க்கையை குழப்பிக்கொள்ளக் கூடாது என்ற தெளிவுக்கு குணா வந்திருப்பார் என்றே நம்புவோம்.

தொடர்புக்கு : 98409 03586