புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புரட்சிக் குரல்
விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?
சமீபத்தில் மதுரையில் விஜய் ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புஸ்ஸி ஆனந்த், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் பெயர்களை படித்துவந்தார். அப்போது விஜய் என்று பெயர் இருந்த இடத்தில் எல்லாம் தளபதியின் பெயர் கொண்டவர் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அதாவது விஜய் என்ற பெயரை சொல்வது அவ்வளவு மரியாதை இல்லையாம்.
இந்த விவகாரம் இப்போது சமூகவலைதளங்களில் பற்றி எரிகிறது. விஜய் ரசிகர்கள், ரசிகைகள் பலரும் விஜய் என்று சொல்லக்கூடாதா என்று கொதிக்கிறார்கள். சமூகவலைதளத்தில் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சோனியா அருண்குமார் இது குறித்து, ‘புஸ்ஸி ஆனந்த் அவர்களே… கோடிக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தை இத்தனை ஆண்டுகள் நீங்கள் கட்டி வளர்த்து இந்த இடத்திற்கு நகர்த்தி கொண்டு வந்ததில் உங்களுடைய கடும் உழைப்பும் மிகப்பெரிய காரணம் என்பதை ஒருபோதும் மறந்துவிடவில்லை. அப்படி இருக்க இந்த தருணத்தில் இப்படியான தவிர்க்கப்பட வேண்டிய சிறு சிறு சொதப்பல்களை நீங்களே செய்கிறீர்கள் என்பதே வருத்தமாக உள்ளது.
இது மீண்டும் மீண்டும் நடக்கும்போது நெஜம்மா முடியல அண்ணே. தயவு செய்து சிறிதேனும் உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயலும் விஜய் என்ற தலைவரை மட்டும் அல்லாது அவரை பின்பற்றி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களையே கேள்விக்குள்ளாக்கும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
விஜயை எங்களுக்கு என்ன விரும்பமோ அவ்வாறே அழைப்போம் அண்ணா. விஜய் என்று அழைப்பதில் எந்த மரியாதை குறைவும் இல்லை. இப்போது மட்டுமல்ல அவர் எப்போதும் எங்கள் வீட்டில் ஒருவரே.
விஜய் மக்கள் இயக்கம் தற்போது தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதைய அரசியல் சூழலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றி மாற்றி ஓட்டளித்து ஓய்ந்து போன தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருப்பது விஜயும், தவெகவும் என்றால் மிகையல்ல.
அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் போட்டி போட யாரோ ஒரு சாமானியனால் முடியாது அதற்கு விஜய் போன்ற தமிழக மக்களிடம் தங்கள் வீட்டு பிள்ளையாக சென்று சேர்ந்துள்ள விஜய் ஒருவரால் தான் முடியும் என ஆணித்தரமாக நம்புகிறேன். என் போன்றே தவெக மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்து தான் பலர் தவெக ஆதரவு நிலைபாட்டை எடுத்து இயங்கி வருகின்றனர். இதில் தங்களை அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைத்துக்கொண்ட மக்கள் ஏராளம்.
தவெக அறிவிப்பு வெளியான பின்னர் நீங்கள் கொடுத்த அனைத்து பத்திரிக்கையாளர் சந்திப்புகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன். இந்த சந்திப்புகளில் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் இன்னும் கூடுதல் பொறுப்புடன் பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதாக எண்ணுகிறேன். பொது நிகழ்ச்சிகளிலும் நீங்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருப்பது உங்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த கட்சிக்கும் நன்மை பயக்கும் என கருதுகிறேன்.
குறிப்பாக விஜய் என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்னும் போக்கு, பொது கூட்டத்தில் நமது தோழர்களிடம் கடிந்துக் கொள்வது, விஜய் புகைப்படத்தை சுமந்துக்கொண்டு பிறருக்கு உதவி செய்வது, உணவு பறிமாறுவது, ரத்த தானம் கொடுத்தாலும் விஜய் படத்தை மேலே கட்டிக்கொண்டு கொடுப்பதென பல்வேறு செய்பாடுகள் தவிர்க்கப் பட வேண்டியவை.
தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் அழைத்தும் அழைக்காமலும் வந்தாலும் அவர்கள் இன்ன கேள்விகளை கேட்க வாய்ப்புகள் உண்டு என நாம் சிறிதேனும் தயார் ஆகிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரைத்த மாவாக தளபதி பேசுவார், அவர் சொல்லுவார் என பதில் சொல்ல நமக்கு ஏன் இப்படியான நிகழ்ச்சி ஏற்பாடுகள்? பத்திரிகையாளர் அழைப்புகள்? சந்திப்புகள்?
ஒரு கோடிக்கும் மேலாக தற்போது வரை உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் பொது தளங்களில் இப்படி சொதப்பல்களை செய்யலாமா? இது உங்களை மட்டுமல்லாது கட்சிக்கும் விஜய்க்கும் எப்படியான பின்னடைவுகளை ஏற்படுத்தும் என யோசிக்க வேண்டாமா?
விஜய் என்று கூறாமல் தளபதி பெயரைக் கொண்ட என்றெல்லாம் நீங்கள் எழுதி வைத்துக்கொண்டு வாசித்தே ஆக வேண்டுமா? ஒரு பொறுப்பான பொதுச்செயலாளராக அதை நீங்கள் தவிர்த்திருக்க வேண்டாமா? தோழர்களே என அனைவரையும் அழைக்கும் விஜய் போன்ற தலைவரை வைத்துக்கொண்டு இப்படி செயல்களை செய்யலாமா? மாற்று அரசியல் செய்ய வரும் தவெகவை கேளிக்கூத்தாக்கும் செயல்கள் அல்லவா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அட, மானமுள்ள ரசிகையா இருக்காங்களே.