பூனை மாமியார் எலி மருமகள்

உறவுகளில் அதிகாரப் போராட்டம்



நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய தோல் மற்றும் கூந்தலின் தன்மையைக் காட்டி எப்படிப்பட்ட மேக்கப் சரியாக இருக்கும் என்று ஆலோசனை செய்தாள். திருமண மேடையில் பிரகாசமாக தெரிவதற்கு இப்போதே அழகு சிகிச்சை தொடங்கவேண்டும், விதவிதமான ஹேர்ஸ்டைல் போட்டுப் பார்த்து, முகத்துக்கு பொருத்தமானதை தேர்வு செய்யவேண்டும் என்று அழகுக்கலை நிபுணர் சொன்னதை, வேதவாக்காக எடுத்துக்கொண்டு செலவு செய்யத் தொடங்கினாள்.
முகத்துக்குப் போடும் க்ரீம் தொடங்கி நகப்பாலீஷ் வரையிலும் அழகு நிலையத்தினர் சொன்னதற்கு அப்படியே தலையாட்டினாள்.
இதுபோல் ஆடை அலங்காரம், இன்விடேஷன் என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து அக்கறையுடன் செய்தாள். நண்பர்கள், உறவினர்கள் யாரும் விடுபடக்கூடாது என நினைவுகளை தோண்டியெடுத்து அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பிவைத்தாள். பெரியோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்பதால் ஜாம்ஜாமென்று நடந்தது. உள்ளூர் சம்பந்தம் என்பதால் சம்பிரதாயங்கள் முடிந்து மாமியார் வீட்டுக்குப் போனாள் நந்தினி. வசதி, வாய்ப்புகளோடு வந்தவள் என்பதால் கணவன் பிரகாஷ், நந்தினியை அன்போடு நேசித்தான்.
மாமனார் இல்லாத குடும்பம், மாமியார் சகுந்தலா கையில்தான் வீட்டுப் பொறுப்பு இருந்தது. சமையல் முதற்கொண்டு எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ பிரகாஷை மட்டும் அன்போடு கவனித்துக்கொண்டால் போதும் என்று மாமியார் சொன்னதும் சந்தோஷமாகிவிட்டாள் நந்தினி. ஒரு மாதம் நல்லபடியாகத்தான் போனது.
பிரகாஷ் வேலைக்கு செல்லத் தொடங்கியதும் சின்னச்சின்னதாக பிரச்னைகள் ஆரம்பமானது. பிரகாஷ் ஆபிஸ்போனதும் தனது அறைக்குள் முடங்கிக்கொள்வது நந்தினியின் வழக்கம். தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் போனில் அரட்டை அடித்து, ஃபேஸ்புக், ட்விட்டர்களை நோண்டிவிட்டு மதியம் சாப்பிடத்தான் கீழே இறங்குவாள். மாமியாருடன் கொஞ்சநேரம் பேசிவிட்டு மீண்டும் மேலே போய்விடுவாள். ஆனால் அன்று கீழே இறங்கியபோது வழக்கத்திற்கு மாறாக சகுந்தலா கட்டிலில் படுத்துக் கிடப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தாள்.
தலை வலிக்கிறது என்று சகுந்தலா சொன்னதும் தன்னுடைய அறையில் இருந்து தைலம் எடுத்துக்கொடுத்தாள் நந்தினி. அதன்பிறகு சாப்பிட்டு தனது அறைக்குப் போனவள் நன்றாக தூங்கிவிட்டு மாலை நேரம் கீழே வந்தாள். காபி கொண்டுவந்து கொடுத்த சகுந்தலாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. தலைவலி குறித்து கேட்டதற்கு மையமாக தலையை ஆட்டிவைத்தாள்.
அடுத்த நாள் பிரகாஷ் மெதுவாக பேச்சைத் தொடங்கினான். இனிமேல் காலையிலும் மதியமும் கீழே அம்மாவுக்கு ஒத்தாசையாக இரு. எப்போதும் உன் அறைக்குள் அடைந்து கிடக்கவேண்டாம். தலை வலிக்கிறது என்று சொன்னால், காபி போட்டுக்கொடு என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
கிழவி போட்டுக்கொடுத்துவிட்டாள் என்று கடுப்பானாள் நந்தினி. காபி வேண்டுமென்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே, எதற்காக பிள்ளையிடம் சொல்ல வேண்டும் என்று டென்ஷன் ஆனாள். உடனே தோழிகள், அம்மா, அப்பாவிடம் இந்த தகவலை சொன்னாள். ஆளுக்கொரு அபிப்பிராயம் சொன்னார்கள். ஆரம்பத்திலேயே தெளிவாக இரு, பணிந்துவிட வேண்டாம் என்று தோழிகள் உசுப்பேற்றினார்கள். அதனால் அன்றும் நந்தினி கீழே போகவில்லை. மதியம் சாப்பிட கீழே இறங்கியபோது சகுந்தலா சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் சகுந்தலா அமைதியாக டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தாள். காலையில் பிரகாஷுக்கு கொடுத்துவிட்ட குழம்பும் பதார்த்தமும் மட்டுமே இருந்தது. புதிதாக எதுவும் சமைக்கவில்லை என்பது புரிந்தது. அதை மட்டும் சாப்பிட்டு மேலே போனாள். அன்று இரவு கணவன் மனைவிக்குள் முதல் சண்டை தொடங்கியது.
மிகவும் சாதாரணமாக தொடங்கிய பிரச்னை மூன்றே மாதங்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. யார் யாரோ சமாதானம் செய்வதாக வந்து, பிரச்னையை மேலும் பெரிதாக்கினார்கள். ஓரு கட்டத்தில் தனிக்குடித்தனம் மட்டும்தான் தீர்வு என்பதில் நந்தினி உறுதியாக இருந்தாள். ஒரே பையன் என்பதால் அம்மாவைவிட்டு எங்கேயும் வரமாட்டேன் என்பதில் பிரகாஷ் தெளிவாக இருந்தான்.
அதனால் வரதட்சணை கேட்டு துன்பப்படுத்துவதாக பிரகாஷ் மீது போலீஸில் புகார் கொடுத்தாள் நந்தினி. பெண் போலீஸார் அடித்து அவமானப்படுத்தியதில் மனம் உடைந்துபோனான் பிரகாஷ். இரண்டு பெண்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு விழித்த பிரகாஷ், ஒரு கட்டத்தில் பொறுக்கவே முடியாமல் தூக்கில் தொங்கிவிட்டான். இப்படித்தான் வீட்டுக்குவீடு ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் தொடங்கி வெவ்வேறு விதமாக முடிவடைகிறது. தன்னுடைய இஷ்டப்படிதான் வாழ்க்கை நகரவேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். அதில் ஏதேனும் இடைஞ்சல் வரும்போது தங்களை மறந்து தவறுதலாக எதையேனும் செய்துவிடுகிறார்கள். அதனால் இயல்பான வாழ்க்கை மேலும் சிக்கலாகிறது.
• இத்தனை சின்ன விஷயத்துக்காக மனிதன் தூக்குப் போட்டு சாவானா?
இதைவிட மிகச்சாதாரண பிரச்னைக்காக விவாகரத்து வாங்குகிறார்கள், வீட்டைவிட்டு ஓடுகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள். கண்ணாடி மனதுடன் பிள்ளைகள் வளர்வதால், தங்கள் எண்ணத்துக்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என நினைக்கிறார்கள். பொருளாதார சுதந்திரம் காரணமாக யாரையும் அனுசரிக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதனால்தான் ஆடை வடிவமைப்பாளர், அழகு நிபுணருக்கு கொடுக்கும் மரியாதையைக்கூட குடும்ப அங்கத்தினருக்குத் தருவதில்லை. தனி மனிதனாக வெற்றியடைந்தாலும், குழுவாக தோல்வியைத் தழுவுகிறார்கள்.
• திருமணம் முடிக்கும் அனைவரும் தனிக்குடித்தனம் நடத்தவேண்டும் என்று சட்டம் போட்டால் பிரச்னை தீருமா?
இன்னும் பிரச்னை அதிகமாகும். நடுவர் இல்லாத பட்டிமன்றம் போல் தம்பதியர் கட்டி உருள்வார்கள். திருமண வயதை அதிகரிப்பதாலும் இந்த பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. மனிதனின் இயல்பை தெரிந்துகொள்வதும், மாமியார் குறித்த மாய பிம்பங்களை உடைப்பதும்தான் திருமண பந்தம் வெற்றி அடைவதற்கான வழி.
• அப்படியென்றால் மனிதனின் இயல்பு என்ன?
கூடி வாழ்வதுதான் மனிதனின் இயல்பு. தனியாக எந்த ஒரு மனிதனாலும் வாழ முடியாது. அதனால்தான் கொடூர குற்றம் செய்பவருக்கு தனிமை சிறை தண்டனை கொடுக்கிறார்கள்.. மிருகம் போல் மனிதனால் தனியனாக வாழமுடியாது. ஏனென்றால் மிருகங்களின் தேவை உணவு மட்டும்தான். ஆனால் மனிதனின் தேவைகள் ஆயிரக்கணக்கானவை. அதனால் ஒவ்வொரு வசதிக்காகவும் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழவேண்டும்.
ஒரு நாள் பால் போடுபவர் வரவில்லை என்றால்கூட தத்தளித்துவிடுவான் மனிதன். ஒருவன் சந்தோஷமாக வாழவேண்டும் என்றால் ஒருவரையொருவர் அனுசரித்துத்தான் வாழவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
• ஆனால், மாமியார்கள் கொடுமைப்படுத்துகிறார்களே?
ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால், வேலையைக் கற்றுக்கொள்ளும் வரையிலும் அனைவரையும் அனுசரித்துத்தான் செல்லவேண்டும். அவ்வப்போது திட்டுவதை தாங்கிக்கொள்ள வேண்டும். யாரோ ஒருவர் திட்டுவதை தாங்கிக்கொள்ளும் பெண்களால், மாமியார் பேசுவதைக்கூட ஏற்க முடிவதில்லை. ஏனென்றால் அவரை வேறு ஒரு நபராக பார்க்கிறாள். அவள் பெற்ற பிள்ளையை தன்னுடையவனாக சொந்தம் கொண்டாடுபவள், மாமியாரை அந்த வட்டத்திற்கு வெளியே நிறுத்துகிறாள். எந்த நேரமும் தன் கணவனை தன்னிடம் இருந்து மாமியார் பிரித்துவிடுவான் என்று பயப்படுகிறாள்.
இதே பயம் மாமியாரிடமும் இருக்கிறது. இத்தனை நாளும் தன்னிடம் இருந்த மகனை ஒட்டுமொத்தமாக பிரித்துவிடுவாள் என்று மருமகளை நினைத்து அச்சப்படுகிறாள் மாமியார். இருவரது பயமும்தான் சண்டை, சச்சரவாக வெளிப்படுகிறது. யாரும் யாரிடம் இருந்து பிரியப்போவதில்லை, அனைவரும் இணைந்து சந்தோஷமாக வாழப்போகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் உணர்த்துவதில்தான் திருமண வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.
• மாமியார் கொடுமைப்படுத்தினால் என்னதான் செய்யவேண்டும்?
பொறுமையும், புன்னகையும் பெண்ணின் ஆயுதம். ஆதலால் அன்பு செலுத்து. அன்பினால் மட்டும்தான் கொடுமையை எதிர்த்து வெல்லமுடியும்.