செல்போன் பேசவும் வாட்ச், மோதிரம் அணிய டாக்டர்களுக்குத் தடை

உயிரைக் காப்பாற்றும் முக்கியப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய அரசு திடீரென ஒரு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


உயிரைக் காப்பாற்றும் முக்கியப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய அரசு திடீரென ஒரு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும், அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவைக்குப் பிந்தைய நோயாளிகளுக்கான தேறுதல் வார்டுகளிலும் ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் நோயாளிகள், பணியாளர்கள் நலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் சாராம்சம் வருமாறு: பணியிடங்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் அணியக்கூடிய அணிகலன்கள் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பணியின்போது சுகாதார ஊழியர்கள் முழங்கைக்குக் கீழ் அணியும் கைக்கடிகாரம், வளையல்கள், மோதிரம், பிரேஸ்லட், மத அடையாளக் கயிறுகள் போன்ற அணிகலன்கள் சருமத்தில் உள்ள நுண்ணுயிர்கள் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கிறது.

அதுவும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவது கிருமித் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. அதன் நிமித்தமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. தொற்று பரவல் அபாயத்தைக் குறைப்பதுபோல், உச்சபட்ச சுகாதாரம் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் கை சுகாதாரம் தொடர்பாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தாலும் அதில் தேவைக்கேற்ப கைக்கடிகாரம் அணிவது தொடர்பாக சிறு திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்புலம் என்ன? திடீரென மத்திய அரசு இத்தகைய உத்தரவு பிறப்பிக்க லேன்சட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை காரணமாக இருக்கிறது. மருத்துவமனை சார்ந்த நோய்த் தொற்றுகள் ( hospital-associated resistant infections - HARI) பரவுவதில் உலகிலேயே இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்படும் இடத்தில் உள்ளன என்று அண்மையில் வெளியான 'Antimicrobial Resistance: Addressing a Global Threat to Humanity'' என்ற மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மருத்துவ சேவை சம்பந்தமான தொற்றுகள், நோயாளிகள் சிகிச்சை பெறும்போது மேலும் சில புதிய தொற்றுகளை அவர்களுக்குக் கடத்தக் கூடும். இதனால் நோய் குணமாவதில் தாமதம் ஏற்படுதல், மருத்துவமனையில் தங்கும் காலம் அதிகரித்தல், மருத்துவ செலவினங்கள் அதிகரித்தல், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுதல் போன்ற பல சிக்கல்கள் உருவாகலாம் என அந்த மருத்துவக் கட்டுரை தெரிவித்துள்ளதை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.