தமிழர் இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர்! நடிகர் விஜய்சேதுபதிக்கு பெருகிவரும் எதிர்ப்பு…

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க இருக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்புகள் பெருகிவருகின்றன. இப்போது தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.


நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. 

ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதைமாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.

ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன். 

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும். 

ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்? அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் விஜய் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.