மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம். ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிப்பு

முதல்வர் கண் கலங்கும் அளவுக்கு, அவரது தாயாரை அவமரியாதை செய்த ஆ.ராசா மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும், ரத்தத்தின் ரத்தங்களின் கோபம் தணிவதாக இல்லை. ஆகவே, இன்றும் பல இடங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது.


அரியலூரில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர். அப்போது, தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்ற காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராசா மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் முகாந்திரம் இருப்பது தெரியவரவே, ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 294 (பி) அவதூறாகப் பேசுதல், 153 (இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசுதல்), தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் மற்றும் மீன்சுருட்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 26-ம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் முதல்வரைத் தரக்குறைவாகப் பேசியதாக ஆ.ராசா மீது அந்தந்தக் காவல் நிலையங்களில் மேற்கண்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆ.ராசாவைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, திமுக மற்றும் ராசாவுக்கு எதிரான கோஷங்களை பெண்கள் எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் ராசாவுக்கு எதிராக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

அப்போது, அதிமுகவினர் சிலர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர், விரைந்து சென்று அருகில் இருந்த கடையிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி அணைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு வழியாக சமாதானம் அடைந்த நிலையில், உருவ பொம்மை மீது முழுவதுமாக தண்ணீரை ஊற்றிக் காவல்துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அரியலூர் அண்ணா சிலை அருகே பரபரப்பு காணப்பட்டது.