சைக்கிள் ஓட்டுங்க பெண்களே

ஜூன் 3 உலக சைக்கிள் தினம்



அது ஒரு காலம் சைக்கிள் இருந்தாலே கெத்து என்ற மனப்பான்மை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் இருந்தது. லேடீஸ் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும் பெண்கள் செம அழகு. ஆனால், கால மாற்றம் சைக்கிளை கண்காட்சிப் பொருளாக மாற்றிவிட்டது.
உடற்பயிற்சிக்குச் செல்பவர்களுக்கு மட்டுமே சைக்கிள் எனும் அளவுக்கு அது மாறிவிட்டது. அரசு மாணவர், மாணவிகளுக்கு கொடுக்கும் சைக்கிள் ஓட்டுவதைக் கூட கெளரவக் குறைச்சலாகக் கருதுகிறார்கள். அதேநேரம், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகளை பரப்புவதற்காக ஆண்டு தோறும் ஜூன் 3ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சைக்கிள் ஓட்டுவது பயணத்துக்கு மட்டும் என்ற எண்ணத்தை நீக்கிவிட்டு, இதனை தினசரி செயல்பாடாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத ஒரே போக்குவரத்து சாதனம் இது மட்டுமே.
சைக்கிள் ஓட்டுவது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இருதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு சைக்கிள் பயிற்சி மிகவும் நல்ல விருப்பமாக இருக்கும். தினமும் சைக்கிள் ஓடுவதால் நமது உடம்பின் ஒட்டுமொத்த கீழ் பகுதியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கால் தசைகள் அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உடம்பில் குவாட்ஸ், க்ளூட்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் போன்றவற்றில் நல்ல முறையிலான மாற்றங்கள் ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டும் போது, நுரையீரல் தொடர்ந்து புதிய ஆக்ஸிஜனை இழுக்கும். ஆரோக்கியமான நுரையீரல் அதிக ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை உறிஞ்சும் போது நுரையீரல் முழுவதும் அதிக காற்று இருக்கும். தினமும் சைக்கிள் ஓடுவதால் நமது நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற பிரச்சனைகள் குறையும்.
ஆண்களை விட பெண்களுக்கு சைக்கிள் ஓட்டுவதால் அதிக நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. பொதுவாக கல்லூரிக்குப் பிறகு பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை தவிர்த்து விடுகிறார்கள். இனியாவது சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசைப்படுங்கள் பெண்களே.