ஒரே நாளில் 10 தொகுதிகளில் பிரசாரம்... மின்னல் வேகம் காட்டும் எடப்பாடி பழனிசாமி

தேர்தல் என்று வந்துவிட்டால், எல்லாவற்றிலும் முதல்வன் என்பதை நிரூபித்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொங்கு மண்டலம், மேற்கு மண்டலம், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று வடசென்னை பகுதியில் இருந்து வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.


இன்று 2-வது நாளாக மயிலை மாங்கொல்லையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர் அ.தி.மு.க. ஆட்சியில் செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அவரது பேச்சை கேட்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. ஆண்களும், பெண்களும் வீட்டு மாடிகளில் நின்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்டனர்.

மிகவும் ஆவேசமாக பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்க மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தும் பேசினார். அ.தி.மு.க.தான் மக்களுக்கு நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். மாங்கொல்லையில் பிரசாரத்தை முடித்ததும் அசோக் நகர் சென்றார். அங்கு தி.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அம்பேத்கார் சிலை சந்திப்பு அருகே பேசினார். அவரது பேச்சை கேட்க கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

இதன் பிறகு சி.எம்.டி.ஏ. காலனி பகுதிக்கு சென்றார். அங்கு அண்ணாநகர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்க 3 இடங்களிலும் திரளான கூட்டம் கூடியிருந்தது. மக்கள் வெள்ளத்தில் அவரது வாகனம் மெதுவாக சென்றது. அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ஐஸ்அவுஸ் அருகே பேசுகிறார். அதன் பிறகு ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளரை ஆதரித்து வள்ளுவர்கோட்டம் சுதந்திர தின பூங்கா அருகே பிரசாரம் செய்கிறார்.

பின்னர் சைதாப்பேட்டை சென்று அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அரங்கநாதன் தெரு சுரங்கப்பாதை அருகே பேசுகிறார். அங்கிருந்து எம்.ஜி.ஆர். நகர் சென்று விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளரை ஆதரித்தும், முகப்பேர் மேற்கு பகுதிக்கு சென்று மதுரவாயல், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் பேசுகிறார். அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இளங்கோ நகர் ஆபீசர் காலனி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

சென்னையில் இன்று 10 தொகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஓட்டு வேட்டை நடத்துகிறார். இதுவரை யாரும் செய்யாத சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. சபாஷ் முதல்வரே.