ஜெயக்குமார் கொலை வழக்கில் மாஜி அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா..?

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் தனிப்படை போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்திய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் தனிப்படை போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்திய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமார் : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 2-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் உவரி காவல் நிலையத்தில் இவரது மகன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் சடலமாகக் கிடந்தார். அவர் எழுதிய மரண வாக்குமூலம், மருமகனுக்கு எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

8 தனிப்படைகள் அமைப்பு: இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது . இவர்கள் 15 தினங்களுக்குள் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் விசாரணை: இந்நிலையில், பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டுக்கு தனிப்படை போலீஸார் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினர். தனுஷ்கோடி ஆதித்தன் விபத்தில் சிக்கி, பாதிக்கப்பட்டவர் என்பதால் காவல் நிலையத்துக்கு ஆஜராக முடியாத நிலையில் உள்ளதால் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அதோடு தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தெரிந்த நபரான பாலபாக்யா நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி, அதன் விவரங்களை எழுத்துபூர்வமாக பதிவு செய்து, இருவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டதாக் கூறப்படுகிறது.

செல்போன்கள் மாயம்: ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் இறந்து கிடந்த தோட்டத்துக்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீஸார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை சிக்கவில்லை. அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.