தேர்தல் நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளிதழ் ஒன்றுக்குக் கொடுத்திருக்கும் பேட்டி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
மக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.
கேள்வி:- முதல்-அமைச்சரான பிறகு உங்கள் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி கூற முடியுமா?.
பதில்:- என்னைப் போன்ற விவசாயிக்கு ஒரு நாள் என்பது விடியலுக்கு முன்னரே தொடங்கிவிடும். உழைப்பது என்பது மிகுந்த மனமகிழ்ச்சி தருகின்ற இயல்பான செயலாக இருக்கும். விதைப்பதும், விளைச்சலை கண்டு மகிழ்வதும், அதை அறுவடை செய்வதும், அறுவடை செய்தவற்றை பலருக்கு பகிர்ந்தளிப்பதும், பசி போக்குவதும், விவசாயத்தில் நாங்கள் காணுகின்ற மனமகிழ்ச்சி.
காலையில் எழுந்தவுடன் இறை வணக்கம். பின் சற்று உடற்பயிற்சி அதைத்தொடர்ந்து, அன்றைய நிகழ்ச்சிகள் குறித்து முன் ஏற்பாடு, கட்சிக்காரர்களுடன் உரையாடல், அதிகாரிகளுடன் ஆலோசனை அலுவலகப் பணிகள், கட்சிப் பணிகள் என்று அன்றாட பணிகள் அமையும்.
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடுகிறதா?.
பதில்:- ஆம். கடந்த 4 ஆண்டுகளில் மிக சிறப்பான வகையில் மக்கள் நலப்பணிகளில் அரசு ஈடுபட்ட காரணத்தால், கனவாக இருந்த திட்டங்கள் எல்லாம் தற்போது நனவாகியுள்ளது. உதாரணத்திற்கு 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு,
உயர் கல்வி சேர்தலில் முதலிடம், காவிரி உரிமையை சட்ட போராட்டம் நடத்தி மீட்டெடுத்தது, காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றியது, இரு முறை விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், அதிக மகசூல் - வேளாண் பெருமக்களின் நன்மைக்காக திட்டங்கள் பல, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம், அத்திகடவு - அவினாசி திட்டம், மின்மிகை மாநிலம்,
அதனைத்தொடர்ந்து நீர் மிகை மாநிலம், குடிமராமத்து பணிகளில் தனித்தன்மை, அதிகமான தடுப்பணைகள் - நிலத்தடி நீர் உயர்வு, தொழில் துறையில் வளர்ச்சி - புதிய வேலைவாய்ப்புக்கு வழி வகுத்தல், புதிய தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி, இயற்கை சீற்றங்களின்போது விரைவான களப்பணி மற்றும் நிவாரண உதவிகள், கொரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டு வந்தது போன்றவை. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி.
கேள்வி:- தேர்தல் கருத்துகணிப்புகள் பல்வேறு வகையில் வந்து கொண்டிருக்கிறதே. இந்த தேர்தலில் உங்கள் கணிப்பு என்ன?.
பதில்:- கருத்து கணிப்புகள் அல்லது கருத்து திணிப்புகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. சில கருத்து கணிப்புகள் எங்களுக்கு சாதகமாகவும், வேறு சில கருத்து கணிப்புகள் எதிர் அணிக்கு வெற்றி என்றும் சொல்கின்றன. நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். நாங்கள் செய்த சாதனைகளை மக்கள் பேசுகிறார்கள்.
எனவே கருத்து திணிப்பை பற்றி கவலைப்படாமல், அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் களப்பணியாற்றி வருகிறோம். மக்கள் தீர்ப்பு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும். கருத்து கணிப்புகளை எங்கள் கட்சி ஒரு போதும் நம்பியதில்லை.
கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா காலடியில் தமிழக ஆட்சியாளர்கள் கிடக்கிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளாரே?.
பதில்:- தி.மு.க.வினரைப்போல தமிழ்நாட்டில் வீர வசனம் பேசுவதும், டெல்லிக்கு சென்றவுடன் தாசானுதாசனாக லாலி பாடுவதும் எங்களுக்கு தெரியாத வித்தை. எங்கள் கட்சி மாநில கட்சி. எங்கள் மீது நட்பு பாராட்டும் மத்திய அரசு மாநிலத்தின் நலன்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும். அரசியல் என்பது தேர்தலோடு முடிந்துவிட வேண்டும்.
அதற்குப்பின் மக்கள் நலனை மனதில் வைத்தே உறவுகளை வளர்க்க வேண்டும். “ஆண்டான் அடிமை” மனப்பான்மை இன்னும் சிலர் மனதில் இருந்து மாறவில்லை என்பதையே இத்தகைய விமர்சனங்கள் காட்டுகின்றன. அண்ணா கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். நாங்கள் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்.
கேள்வி:- அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டி இருக்கிறாரே?.
பதில்:- தி.மு.க. கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க., பா.ஜ.க. ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய மந்திரி பதவி பெற்று அனுபவித்த கட்சி. கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மீது கருத்து தெரிவித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது கொலை பழி சுமத்தி, தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர். இலங்கையில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தபோது, அமைதியாக வேடிக்கை பார்த்ததற்காக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிடு கட்சியினர், தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இப்படி ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தியதை எல்லாம் மறந்துவிட்டு, இப்பொழுது அமைத்துள்ள கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி.கேள்வி: - சரியாகச் சொல்லுங்கள், கட்சி பெரியதா?, ஆட்சி பெரியதா?, முதல்-அமைச்சர் பதவி பெரியதா?, ஒருங்கிணைப்பாளர் பதவியா?. யாருக்கு அதிக செல்வாக்கு, அதிகாரம்?.
பதில்:- கட்சி என்பது உயிர். ஆட்சி என்பது உயிரால் உந்தப்பட்டு செயல்படும் உடல். அரசியல் என்பது இரண்டையும் உள்ளடக்கியது. அதிகாரம், செல்வாக்கு என்ற சொற்கள் எல்லாம் ஓர் உண்மையான மக்கள் தொண்டனுக்கு பொருட்டே அல்ல.
கேள்வி:- பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வருவதை அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரும்பவில்லை என்பது போன்ற தகவல்கள் வருகிறதே?.
பதில்:- தவறான தகவல். பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலர், அ.தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் எங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பெருகி வருகிறது.
கேள்வி:- தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதே?
பதில்:- வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைக்கும் தகவலை வைத்து சோதனை நடத்துகிறார்கள். இதில் கட்சி பேதம் பார்ப்பதில்லை. தி.மு.க.வினர் கட்சி பேதம் பார்த்து அறிக்கை விடுவார்கள். இதனை பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கேள்வி:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறாரே?.
பதில்:- ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பேசுகின்ற பேச்சல்ல? ஆட்சியில் இருக்கும் நாங்கள் புள்ளி விவரங்களை சேகரித்து, ஆய்வு செய்கின்றபோது, இதை அறிந்து உடனே அறிக்கை விடுவது மு.க.ஸ்டாலினின் வாடிக்கை. இந்த புள்ளி விவரங்களை வைத்து அறிவிப்பாக வெளியிடும்போது, இதை நான் சொல்லித்தான் அரசு செய்கிறது என்று அறிக்கை விடுவது மு.க.ஸ்டாலினின் வாடிக்கை.
கேள்வி:- ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடும் வழக்கம் இருந்த நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதே. எப்படி அவர்களால் நிறைவேற்ற முடியும்?.
பதில்:- ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அதனடிப்படையில் சில திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம்.
கேள்வி:- தற்போதைய அ.தி.மு.க. முக கவசம் அணிந்திருப்பதாகவும், அதை கழற்றினால் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கலவையின் ஒரு முகம்தான் மக்களுக்கு தெரியும் என்றும் ராகுல்காந்தி கூறியிருக்கிறாரே?.
பதில்:- எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க எப்போதுமே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு மாநில நன்மைகளை பெற்று வந்த அரசு. மத்திய அரசில், தி.மு.க-பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகித்து மாநில அரசுக்கு பெற்ற நிதியைவிட நாங்கள் மிக அதிமாக நிதியினை பெற்றுள்ளோம். நாங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். தி.மு.க. போல குடும்ப நலனுக்காக நாங்கள் என்றுமே இருந்ததில்லை.
கேள்வி:- அ.தி.மு.க. அமைச்சரவை ஊழல் அமைச்சரவை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறாரே?.
பதில்:- ஊழல் காரணத்திற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது ஒரு வரலாறு. விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்த கட்சி தி.மு.க. உதாரணத்திற்கு ரத்து செய்யப்பட்ட டெண்டர் என்பதே தெரியாமல் அதில் ஊழல் என புகார் கொடுத்துள்ளார். அதனை நேரடியாக விவாதிக்கலாம், ரெடியா என்று எல்லா கூட்டங்களிலும் நான் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை ஸ்டாலினிடம் இருந்து பதில் இல்லை.
கேள்வி: - இந்த முறை த.மா.கா.வையும் சேர்த்து 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் களம் காண்கிறது. அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்த ஏராளமான எங்களது சாதனைகள் இந்த தேர்தலில் எங்களுக்கு முழுமையான வெற்றியை தேடித்தரும். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை, அண்ணா உருவம் பதிக்கப்பட்ட அ.தி.மு.க. கொடி இருக்கும் வரை எங்கள் இயக்கம் வெற்றிக்கொடி கட்டும், வீர நடைபோடும்.