இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? தல தோனியா? கிங் கோஹ்லியா? நச்சுன்னு சொன்ன ஷிகர் தவான்!

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களம் இறங்குபவர் ஷிகர் தவான் ஆவார். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தனது குடும்பத்தினரிடையே நேரத்தை செலவழித்து வருகிறார். 

இந்நிலையில் ஷிகர் தவான் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதானுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடியனார். அப்போது இர்பான் பதான் தவானிடம் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த தவான் நான் தோனி மற்றும் கோலி தலைமையில் மட்டுமே ஆடியுள்ளேன். அதில் தோனியே சிறந்த கேப்டன் எனவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர் தற்போது விளையாடும் இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி என்று பதிலளித்தார். உலகிலேயே எந்த பந்து வீச்சாளரின் பந்து வீச்சை எதிர்கொள்வதை கடினமாக கருதுகிறீர்கள் என்று கேள்விக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் என்று தவான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.