சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந்த ராமேஸ்வரம்! அதிகாரத்தை கைப்பற்ற ஜெயலலிதா ஆசி..!

தமிழக அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும் சசிகலா, அதிமுகவில் தான் இழந்த அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான காய் நகர்த்தல்களை துவங்கியுள்ளார்.


சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக சசிகலா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். பின்னர் திடீரென தஞ்சை புறப்பட்டுச் சென்ற அவர் கும்பகோணம் அருகே உள்ள கோவில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய சசிகலா, அங்கும் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார். இதனை தொடர்ந்து மறுபடியும் தனது ஆன்மிக சுற்றுலாவை தொடங்கிய சசிகலா நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயத்திலும் வழிபாடு நடத்தினார். இவை அனைத்துமே சசிகலா வழக்கமாக செய்யும் ஆன்மிக பணிகள் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால் ராமேஸ்வரம் சென்று அங்கு ராமநாதசுவாமி கோவிலில் சசிகலா செய்த இரண்டு பூஜைகள் தான் அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று மாலை திடீரென சசிகலா ராமேஸ்வரம் சென்றார். பிறகு அங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த திருப்புல்லானி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலுககு சென்று சசிகலா வழிபட்டார். பொதுவாக நோய் வாய் பட்டு அவதிப்படுபவர்கள் அதில் இருந்து விடுபட்டு நீண்ட நாள் வாழ இந்த கோவிலில் வழிபாடு நடத்துவார்கள். ஆதிஜெகநாத பெருமாள் அருளாசி கிடைத்தால் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ முடியும் என்பது ஐதீகம். இதற்காகவே அந்த கோவிலுக்கு சென்று சசிகலா வழிபாடு நடத்தியதாக சொல்கிறார்கள்.

இதனை அடுத்து ராமேஸ்வரம் திரும்பி மறுநாள் அதிகாலையில் சசிகலா, ராமநாதசாமி கோவிலுக்கு சென்று ஸ்படிக லிங்க பூஜை நடத்தியுள்ளார். இதன் பிறகு புண்ணிய தீர்த்தம் சென்று அங்கு நீராடி வழிபாடு செய்துள்ளார். பொதுவாக இந்த ஸ்படிக லிங்க பூஜை என்பது தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் முன்னோர்கள் மறைந்த பிறகு அவர்களின் ஆசிர்வாதத்தை பெற செய்யப்படும் பூஜை என்கிறார்கள். அந்த வகையில் ஜெயலலிதாவின் ஆசியை பெற சசிகலா இந்த பூஜையை ராமேஸ்வரத்தில் நடத்தியிருக்கலாம். இதே போல் ராமநாதசுவாமி கோவிலில் ருத்ர ஜெப பூஜையையும் சசிகலா நடத்தியுள்ளார்.

பொதுவாக இந்த ருத்ர ஜெபம் காசி மற்றும் ராமேஸ்வரத்தில் மட்டுமே நடைபெறும். இதற்கு காரணம் இந்த பூஜையில் வைக்கப்படும் புனித நீர். காசி அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள புனித நீரை மட்டுமே வைத்து கும்பத்திற்கு செய்யப்படும் பூஜையே ருத்ர ஜெப பூஜை எனப்படுகிறது. சசிகலாவிற்காக இந்த பூஜையை ராமேஸ்வரத்தில் உள்ள சிறுங்கேரி மடத்தின் மூத்த ஆன்மிகவாதிகள் செய்துள்ளனர். ருத்ர பூஜை என்பது மனதில் உள்ள குழப்பங்கள் நீங்க மனத் தெளிவு அடைவதற்காக செய்யப்படும் பூஜை. அத்தோடு இந்த பூஜையில் ஈடுபடுபவர்கள் தங்களை சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்க முடியும்.

அதாவது சசிகலா ஸ்படிக லிங்கத்திற்கு இந்த ருத்ர ஜெப பூஜையை நடத்தியுள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவின் ஆசியை பெற்று அரசியல் களம் வேண்டாம் என்கிற தனது எதிர்மறை எண்ணத்திற்கு முடிவுகட்டி மறுபடியும் அரசியல் களம் செல்ல வேண்டும் என்கிற நேர்மறை எண்ணத்திற்கு சசிகலா தன்னை தயார்பாடுத்தவே இந்த பூஜைகளை செய்ததாக சொல்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மிக முக்கியமான முடிவு ஒன்றை சசிகலா எடுப்பார் என்கிறார்கள். அந்த முடிவு மிகவும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் அதாவது அதிமுகவில் மறுபடியும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சசிகலா தற்போது கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று. அதே போல் தேர்தல் களத்தில் விரைவில் அவர் எடுக்க உள்ள முடிவும் யாரும் எதிர்பாராத ஒன்றாகவே இருக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் தனி அணியாக களம் இறங்கியுள்ளது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் என ஆளும் கட்சி தரப்பிற்கு மட்டும் அல்லாமல்அடுத்து தங்கள் ஆட்சி தான் என்று மார்தட்டி வரும் திமுகவிற்கும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார் டிடிவி தினகரன். அந்த வகையில் தென் மாவட்டங்களில் ஏழு தொகுதிகளிலும், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் டிடிவி தினகரனின் அமமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.