ஆடி பெளர்ணமியின் அற்புதம் தெரியுமா? தீராத கடன்கள் எல்லாம் தீர்த்துவைக்கும் அற்புத நாள்

ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.


இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன் தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர். ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும். கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது. உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள். கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பௌர்ணமியில் காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்றும் கொண்டாடப்படுகிறது.

அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும் ஞானமும் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்!

ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

வரும் 15.8.2019 அன்று ஆடி பௌர்ணமி. ஆவணி அவிட்டதோடு வரும் இந்த பௌர்ணமி விசேஷமானது. இந்த நன்னாளில் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீராத கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும். உறவு மேம்படும்.