தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி... பிரதமர் முன்பு கொந்தளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மதுரை, அம்மா திடலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தி.மு.க.வின் தகிடுதத்தங்களை வண்டியில் ஏற்றினார்.


ஓராண்டுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது, இந்தியாவிலும் பரவியது. அப்பொழுது பாரதப் பிரதமர் அவர்கள், ஓரே ஆண்டில் கொரோனா வைரஸ் நோயை குணமடைய செய்வதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல ஓரே ஆண்டில் உலகமே வியக்கின்ற அளவிற்கு கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசியை இந்திய நாட்டிற்கு வழங்கிய பெருமை மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சாரும். 

தமிழகம் ஏற்றம் பெறுவதற்காக மத்திய அரசிடமிருந்து பல்வேறு திட்ட உதவிகள் நமக்கு கிடைக்கின்றன. நிதியுதவி கிடைக்கின்றன. நாம் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிகிறது என்று சொன்னால், அதற்கு நமக்கு தேவைப்படுகின்ற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது, திட்டத்திற்கு அனுமதி அளிக்கிறது. அதனால் தமிழகத்திலே நம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. 

சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தடையில்லா மின்சாரத்தை கொடுக்கின்றோம். தொழிற்சாலை துவங்குவதற்கு ஏராளமான சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதன்மூலமாக புதிய புதிய தொழில்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றன, இதனால் வேலைவாய்ப்பு பெருகுகின்றது. தமிழகத்தை ஒரு வளம்மிக்க மாநிலமாக உருவாக்குவதற்கு அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபட்டு கொண்டு இருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். 

திமுக ஆட்சியிலே எந்த திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. திமுக ஒரு குடும்ப கட்சியாக இருக்கிறது. வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுக கட்சி. திமுகவை கட்சி என்று சொல்வதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்று கூறலாம். அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேரலாம். அண்ணா திமுகவிருந்து நீக்கப்பட்டவர்கள் அந்த கம்பெனியில் போய் சேர்ந்து இன்றைக்கு பதவி வாங்கி தேர்தலில் நிற்கின்றார்கள்.

இதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா திமுக கட்சி, பாரதிய ஜனதா கட்சி, நம் கூட்டணியில் இடம்பெற்று இருக்கின்ற கட்சிகள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சிகள். மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள். இதன்மூலமாக நாடு வளரும். தமிழகம் ஏற்றம் பெறும் என்று பேசியிருக்கிறார்.