மாநகராட்சி புகாரில் தில்லாலங்கடி லீலைகள்

மாநகராட்சியின் புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மீது தொடந்து புகார் வரவே, நண்பர் மூலம் அதை சோதனை செய்து, அந்த புகார் உண்மை என்பதை கண்டறிந்தார். ஏன் இந்த நிலைமை என்று தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு நேரிலேயே சென்றார்.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 14

யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை அப்படியே நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் சைதை துரைசாமியின் பழக்கம் இல்லை. எதுவாக இருந்தாலும் தீர விசாரித்த பிறகே ஒரு முடிவுக்கு வருவார்.

அப்படித் தான், மாநகராட்சியின் புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மீது தொடந்து புகார் வரவே, நண்பர் மூலம் அதை சோதனை செய்து, அந்த புகார் உண்மை என்பதை கண்டறிந்தார். ஏன் இந்த நிலைமை என்று தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு நேரிலேயே சென்றார்.

அங்கு சென்ற பிறகு தான், புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பும், போதிய எண்ணிக்கையில் ஆட்களும் இல்லை என்பது தெரியவந்தது. கடமைக்காக போனில் குறைகளைக் கேட்டாலும், இங்கு எந்தப் புகாரும் முறைப்படி பதிவு செய்யப்படுவதில்லை. கணக்கு காட்டுவதற்கு போலியாக ஒருசில எண்களில் இருந்து புகார் வந்ததாக எழுதி, அந்த புகார் முடித்து வைக்கப்பட்டதாக எழுதும் தில்லாலங்கடி லீலையே நடந்தது.

உண்மையை அறிந்தவுடன் அதிரடி மாற்றத்துக்குத் திட்டமிட்டார். சைதை துரைசாமி ஆலோசனைப்படி இந்தப் புகார் பிரிவில் புதுமைப் படுத்தப்பட்டது. காலை, மாலை, இரவு என ஷிப்ட் முறையில் பணியாற்ற 23 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள். கம்ப்யூட்டர் பதிவுகள் நவீனமயமாக்கப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக பதிவு செய்யப்பட்டன. புகார் கொடுத்தவர் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம், அவரது புகார் பதிவு உறுதி செய்யப்பட்டது. மிஸ்டு கால் கொடுத்தவர்களையும் தொடர்புகொண்டு குறை கேட்கும் அளவுக்கு இந்தப் பிரிவு சுறுசுறுப்படைந்தது.

போன் மூலம் பெறப்பட்ட புகார், உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டது. அந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சேவையின் மூலம் மனுதாரர் திருப்தி அடைந்த பிறகே, அந்த புகார் மனு மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டது. தினமும் 40 புகார்கள் மட்டுமே வந்த நிலை மாறி அதிக எண்ணிக்கையில் புகார் பெறப்பட்டன. புகார் பிரிவு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்று சைதை துரைசாமியும் சந்தோஷப்பட்டார்.

ஆனாலும், இதிலும் தில்லுமுல்லு நடந்தது.

- நாளை பார்க்கலாம்