பிரஜ்வல் ஆபாச வீடியோவில் காங்கிரஸ் மீது அமித் ஷா காட்டம்

கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் முதன்முதலாக பா.ஜ.க. சார்பில் அமித் ஷா பேசியிருக்கிறார்.


அசாம் மாநிலம் குவாஹாட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, ‘’பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கேட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு.

இதில் காங்கிரஸ் கட்சியிடம் நான் கேட்க விரும்புவது அங்கு நடைபெறுவது யாருடைய ஆட்சி. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தானே. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?. கர்நாடக மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இது. இதில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. கர்நாடக மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் விரக்தியின் வெளிப்பாடாக என்னையும் பல பாஜக தலைவர்களையும் கொண்ட போலி வீடியோக்களை பரப்பி வருகிறது. போலியான வீடியோக்களை பரப்பி மக்களின் ஆதரவைப் பெறும் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.

உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்களா எனத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தன்னம்பிக்கை இல்லை என்பதையே இப்போது நடந்து வரும் குழப்பங்கள் காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.