மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 17


உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பவர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த நேசமும் பற்றுமே உடல் ஆரோக்கியத்திற்கான அவரது தேடுதலுக்குக் காரணமாக மாறியது.

அதாவது, புரட்சித்தலைவரிடம் ஒரு தலைவருக்குரிய அனைத்து நற்பண்புகளும் நிரம்பியிருந்தன. உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தாலும் உணவு எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடு வைத்திருக்கவில்லை. விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடம்புக்கு ஒவ்வாத உணவுகளை எல்லாம் எடுத்துக்கொண்டார். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தையும் அவர் முறையாகப் பின்பற்றவில்லை. இதுவே அவரது உடல் நலனுக்கு ஆபத்தாக மாறியது. ஆகவே, புரட்சித்தலைவரின் மரணத்திற்குப் பிறகு முழுமையான ஆரோக்கியத் தேடலில் இறங்கினார்.

கந்தசாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூல் அவரது ஆரோக்கியத்திற்கு புதிய வழியைக் காட்டியது. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற முன்னோர் வழிகாட்டுதலின் உண்மையைக் கண்டறிந்தார். அதன் பிறகு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது மட்டுமின்றி, அவரை சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவார்.

அதனாலே மாநகராட்சியில் சுகாதாரக் குறைபாடுகளுடன் உணவகத்தைக் கண்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் பூட்டுப் போட்டார். உடனடியாக அந்த உணவகக் கட்டிடத்தை நவீன பாணியில் மாற்றியமைத்தார். சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்குவதற்கு தாமதமாகும் எனத் தெரியவந்ததும், தயக்கமே இல்லாமல் தன்னுடைய சொந்த நிதியில் அந்த உணவகத்திற்குத் தேவையான பாத்திரங்கள் மட்டுமின்றி, தேவையான மளிகைச் சாமான்களும் வாங்கிக் கொடுத்தார்.

அதோடு இந்த உணவகத்தை மூலிகை மலிவு விலை உணவகமாக மாற்றி, அப்போது சித்த மருத்துவ மாணவராக இருந்த வீரபாகுவை மேற்பார்வையாளராக நியமனம் செய்தார்.

இந்த உணவகத்தில் 15 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஹெர்பல் டீ 2 ரூபாய், இட்லி 2 ரூபாய், தோசை 5 ரூபாய், கொழுக்கட்டை, புட்டு போன்றவை 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. வேப்பம் பூ ரசம், முடக்கத்தான் தோசை, தூதுவளை சூப் என்று நிறையவே மூலிகை பயன்படுத்தப்பட்டது.

ஆரோக்கியமான மூலிகை உணவு குறைவான விலையில் அதிக தரத்துடன் தரப்படுவது அறிந்ததும், ஊழியர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தேடி வந்து வயிராற உண்டு மகிழ்ந்தனர். இந்த மூலிகை மலிவு விலை உணவகத்தின் புகழ் பரவி, தலைமைச் செயலகத்தில் இருந்தும் கூட ஊழியர்கள் வந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு நாளைக்கு 2000 நபர்கள் இந்த மலிவு விலை உணவகத்தின் மூலம் பயன் அடைந்தார்கள்.

சென்னை நகருக்கு இதுதான் முதல் மூலிகை உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு குறைந்த விலையில் உணவு கொடுப்பதன் மூலம், அவர்களது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அதன் மூலம் அவர்கள் பணியை திறமையாகவும் சிறப்பாகவும் செய்வார்கள் என்று நம்பினார் சைதை துரைசாமி. மாநகராட்சி ஊழியர்கள் உணவுக்கு அதிகம் செலவழிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

இதையெல்லாம் ஒரு மேயர் முன்னின்று செய்வதற்கு எந்த அவசியமும் இல்லை என்றாலும் முழு கவனம் எடுத்து இதனை செய்துமுடித்தார். அதனாலே ஊழியர்கள் மனதில் சைதை துரைசாமிக்கு தனி இடம் கிடைத்தது.

சைதை துரைசாமி மேற்கொண்ட அடுத்த அதிரடி மாற்றம்.

- நாளை பார்க்கலாம்.