ராகுல் ஜாதகத்தில் பிரதமர் யோகம் இருக்கிறதா..?

பிரபல ஜோதிடரின் துல்லிய கணிப்பு


ராகுல் காந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், சிரித்த முகம் மட்டும் தான். ராகுல் காந்தியின் ஜாதகத்தைப் பார்க்கும் முன்பு அவரது குடும்பம், பாரம்பர்யம் என சுமார் 200 ஆண்டு கால வரலாற்றை புரட்டி எடுக்க வேண்டி இருக்கிறது. ஆண்ட பரம்பரை எனவும் அரச பரம்பரை என மார்தட்டிக் கொள்வதற்கு அத்தனை தகுதியும் ராகுல் காந்திக்கு இருக்கிறது.

ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தியின் தந்தையும் ஜவஹர்லால் நேருவின் அப்பாவுமான மோதிலால் நேரு அந்தக் காலத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர். பல சமஸ்தானங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தவர். அதனாலே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இவருக்கு அரச மரியாதை கொடுத்து தனி அந்தஸ்துடன் நடத்தி வந்தனர். இவரது காலத்தில் தான் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக விதை போடப்பட்டது.

இவருக்கு பிறந்த ஒரே மகன் ஜவஹர்லால் நேரு. அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் அவரது அரண்மனையின் 5 வாசல்களிலும் 5 கார்கள் தயாராக நிற்கும். எந்த வாசல் பக்கம் நேரு வந்தாலும் அந்த வாசல் பக்கம் உள்ள காரில் ஏறிச் செல்வார் என்று சொல்லப்படுவது அக் மார்க் நிஜம். அந்த அளவுக்கு ராஜ வம்சத்தின் வாரிசு ராகுல். அவர் அரசியல் செய்து பிழைப்பு நடத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றாலும் தன்னுடைய அடையாளமாக அரசியலை நினைக்கிறார். அதனாலே நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி வரிசையில் ராகுல் காந்தியும் அரசியல் களத்தில் நிற்கிறார்.

தொடக்கத்தில் ராகுல் காந்திக்கு அரசியல் மீது பெரிய ஆர்வம் இல்லை என்பதுடன் வெறுப்பு அதிகம் இருந்தது. ஆனால், தனது குடும்பத்தினரின் அடையாளமாகத் திகழும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வந்ததை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை.

வலிமையான ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத சூழலில் சோனியா காந்தி ஒருவரால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டவும் வெற்றியை நோக்கி கொண்டுசெல்லவும் இயலவில்லை. மேலும், சோனியாவின் உடல் நிலை நாளுக்கு நாள் பலவீனம் அடைந்துவருகிறது. எனவே தனது தாயாரை அரசியல் சிக்கல்களிலிருந்து விடுவிக்கவே, அரசியலுக்குள் ராகுல் நுழைய வேண்டிவந்தது.

அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் ஒரு சிற்றரசன் மனப்பான்மை அவருக்கு இருந்தது. கொஞ்சம் அலட்சியமாக அரசியலைக் கையாண்டார். இந்த நேரத்தில் அவருக்குக் கிடைத்த விமர்சனங்கள், அலட்சியங்கள், கிண்டல், கேலி போன்றவை அவரை வலிமையாக்கின. அதன் பிறகே எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கத் தொடங்கினார். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு நெருக்கமாகத் தொடங்கினார். எல்லோரிடமும் அன்பு செலுத்த ஆரம்பித்தார். பப்பு என்று கிண்டல் செய்த எதிர்க்கட்சிகள் இன்று ராகுல் காந்தியை ஒரு வலிமை மிக்க தலைவனாக பார்க்கத் தொடங்கிவிட்டன.

இத்தகைய சூழலில் 2024 மக்களவைத் தேர்தலை ராகுல் காந்தி எதிர்கொள்கிறார். இந்த தேர்தலில் ராகுல் வெற்றி பெற்று பிரதமர் பதவியை அடைவாரா அல்லது சோனியா காந்தி வழியில் பிறருக்கு வழி விடுவாரா… அல்லது மீண்டும் தோல்வியை சந்தித்து அவமானத்துக்கு ஆளாவாரா என்பதை அவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து கணிக்கலாம்.

ராகுல் ஜாதகம்

ராகுல் காந்தி 19.6.1970 அன்று புதுடெல்லியில் பிறந்தார். இவர் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் என்பதால் கேட்டை கோட்டை ஆளும் என்பார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்து உள்ளார். தொடக்க காலத்தில் புதன் மகாதிசையில் பிறந்தாலும் அதன் பின் கேது, சுக்ரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு திசை தற்போது நடப்பில் உள்ளது

இவரது ஜாதகத்தில் இரண்டு கிரகம் நீசம் தவிர வேறு கிரகங்கள் ஆட்சி உச்சம் என்பது எதுவும் இல்லை இருந்தாலும் ராசி அதிபதி செவ்வாய் மற்றும் லக்னாதிபதி சூரியன் இணைந்து 11-ல் இருப்பது இதனை குரு 9ம் பார்வையாக சூரியன் செவ்வாய் பார்ப்பதால் இவர் அரசியல் பொது வாழ்வுக்கு வந்தார்,

லக்னத்தில் கேது மகம் நட்சத்திரத்தில் அமர ராகு சதய நட்சத்திர அமர வலுவான ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் திருமண வாழ்வு தள்ளிப்போகிறது. போதாக்குறைக்கு 7க்குடையவன் சனி கிரகம் நீசம் என்றாலும் தலைமுறைக்கும் செல்வம் உள்ளதே என பேருக்குக் கூட ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை. கிரகங்களுக்கு அரசனும் ஒன்று தான் ஆண்டியும் ஒன்றுதான்.

அதேநேரம், இந்த ஆண்டு ராகுல் மண வாழ்க்கை அமையும். அதாவது எந்த வித சடங்கு சம்பிரதாய படி இல்லாமல் ஒப்பந்த வாழ்க்கை மாதிரி தங்கை பிரியங்காவின் முயற்சியாலும் பெரியோர்கள் கட்டாயத்தின் பேரிலும் திருமணம் உறுதியாக நடக்கிறது. அதற்கான நேரம் வந்துவிட்டது.

அரசியல் வெற்றியைக் குறிக்கும் கிரகமான சூரியன், செவ்வாய், குரு, சனி இவருக்கு நல்ல நிலையில் இருப்பதால், இவருக்கு மக்களிடம் செல்வாக்கு நிறைய உள்ளது. இவரது ஜாதகம் பெரியளவில் யோகம் ஒன்றும் இல்லையென்றாலும் சில கிரகங்கள் நின்ற பாவ பலத்தால் மட்டுமே இவர் மக்கள் செல்வாக்கு மிக்க நிலையில் இருக்கிறார் என தெரிகிறது. இவர் அரசியல் பொது வாழ்வு என விரும்பவில்லை என்றாலும் இவர் மீது திணிக்கப்பட்டு பயணப்படுகிறார்

இவருக்கு சுக்ர திசையின் போது தான் பாட்டி இந்திரா துர் மரணம் அடைந்தார். அதே திசை முடிவதற்குள் அப்பா கோர மரணம் அடைந்தார். இவரது லக்னத்திற்கு பாதக திசை தொடர்ந்து குடும்பத்தையே உலுக்கிப் போட்டது. அதன் சூரிய திசையில் இவரே அரசியல் நுழைய பல தூண்டுதல் நடந்தன. சந்திர திசை செவ்வாய் திசையில் முழுமையான அரசியல் பொது வாழ்வு என வந்து விட்டார்

இவருக்கு ராகு திசை 6-11-2023-ல் தொடங்கி குரு புக்தி 20.7.2023 முதல் நடந்து வருகிறது. இக்கால கட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் மிகக் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறார். இந்த தேர்தலில் இவர் சார்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சி முழுமையாக மக்கள் பலத்தையே நம்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றி இவரது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இவரது கடின உழைப்பு வெற்றியை தரும் அதற்குரிய ராகு திசையும் குரு புக்தி பெரிய பதவியான பிரதமர் பதவியைக் கொடுக்காவிட்டாலும் மத்திய அமைச்சர் பதவி கட்டாயம் கிடைக்கும். பிரதமர் பதவியை அடுத்தவருக்குக் கொடுத்து வழிவிட்டு ஒதுங்கி நிற்பார் என்றே கிரகம் குறி காட்டுகிறது

கணித்தவர் : R. சூரியநாராயணமூர்த்தி MA

செல் எண் : 9443923665 & 98650 65849