நிர்மலா தேவிக்கு தண்டனை கிடைச்சாச்சு… மாணவிகளை அனுபவித்தவர்களுக்கு என்ன தண்டனை..?

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேறு எந்த விவகாரமும் வெளிவராதது மக்களிடம் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.


கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேறு எந்த விவகாரமும் வெளிவராதது மக்களிடம் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவில் கடந்த 2018ல் உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி. இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வித்துறையில் செல்வாக்குடன் இருந்தார். இவர், சில மாணவிகளிடம் செல்போனில் ஆசைவார்த்தைகளை கூறி சிலரிடம் அட்ஜஸ்ட் செய்து போகுமாறு கூறியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகையும் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்டது.

இதுதொடர்பாக மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார், பேராசிரியை நிர்மலாதேவி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார், நிர்மலாதேவியை 16.4.2018ல் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய முருகனையும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரையும் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி டி.பகவதியம்மாள் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, இருவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்’’ என்று அறிவித்தார்.

இன்று இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நிர்மலாதேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்டனையை குறைக்க வாதிட்டார். இதனை அடுத்து தற்போது நிர்மலாதேவிக்கு தண்டனை அறிவிக்கபட்டது. அதில் 10 ஆண்டு சிறை, ரூ. 2.42 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதிஅம்மாள் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் இருந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை விடுவித்ததும் இந்த விவகாரத்தில் வேறு குற்றவாளிகள் யாருமே அடையாளம் காட்டப்படாததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.