கறுப்பர் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்வது மிகவும் அராஜகம்..! சுரேந்திரனுக்கு ஆதரவாக எழுகிறது குரல்!

நாத்திகம் பேசுவோர் காலம்காலமாக பொய்யான சடங்கு முறைகளையும், போலியான கடவுள் கொள்கைகளையும் விமர்சனம் செய்துவருவது மரபுதான்.


அதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வது அராஜகம் என்று பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு இது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்றது! இத்தனை அதிகபட்ச தண்டனை எதற்காக?

இப்பவும் சொல்கிறேன்,முன்பும் சொன்னேன்,எப்பவும் சொல்வேன்!கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட பதிவு என்னை பொறுத்த வரை முற்றிலும் ஏற்கதக்கதல்ல! அதில் வெளிப்பட்டது உளறல், அது அறியாமையின் உச்சம்! ஆனால்,அதை கெடு நோக்கத்துடன் அவர்கள் செய்யததாக கருத இடமில்லை! அது குதர்க்கமான நாத்திகவாதம் என்று கூட சொல்லலாம்! அவ்வளவே! இதற்கு அவர்கள் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது! இத்துடன் எச்சரித்து அவர்களை விட்டுவிடுவதே உத்தமம்!

முன்னதாக அவர்களின் அனைத்து பதிவுகளையும் ஆராயாமல் போலீஸ் அபகரித்தது அக்கிரமம்! யாருக்கு ஏவல் செய்ய இந்த குண்டர் தடுப்பு சட்டத்தை போட்டுள்ளீர்கள்? இது நீதிமன்றத்தில் நிற்காது. குண்டர் தடுப்புச் சட்டம் என்பது மணல் கொள்ளை அடிப்பவர்கள், நில அபகரிப்பாளர்கள், கொடூர பாலியல் குற்றவாளிகள் மீது பாய வேண்டிய சட்டம்! அதை எப்படி கடவுள் எதிர்ப்பாளர்கள் மீது பாய்ச்ச முடியும்?

கடவுள் கற்பிக்கப்பட்ட காலம் முதல் கடவுள் மறுப்பும் இருந்தே வந்துள்ளது. ஒரு சமூகம் சமநிலையில் இயங்க அது அவசியமாகவும் பார்க்கப்பட்டது! ரிக் வேத காலத்திலேயே பிரகஸ்பதி, கணநாதன்,உத்தாலகர் போன்ற மிகவும் மதிக்கப்பட்ட நாத்திகவாதிகள் இருந்துள்ளனர்.

நமது மரபில் சாங்கியம்,யோகம், நியாயம்,வைசேஷிகம் ஆகிய செல்வாக்கு பெற்ற தத்துவங்கள் தந்த அனைத்து அறிவுச் செல்வங்களும் நாத்திகமே. இந்திய தத்துவ வரலாற்றில் ஆஸ்திகர்களுக்கும், நாத்திகர்களுக்குமான தர்க்கத்தில் பெருமபாலனவற்றில் நாத்திகர்களே இறுதி வெற்றி பெற்றுள்ளனர். நாத்திகர்களால் இந்த உலகம் அடைந்த நன்மைகள் அளவிடற்கரியது! காரல்மார்க்ஸ்,ஏங்கெல்ஸ், வால்டேர்,இங்கர்சால்,தாமஸ் பெயின்,பிராட்லா ஆகிய எண்ணற்ற நாத்திகர்களின் அறிவால் தான் இந்த சமூகமே தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது!

புத்தர் நாத்திகவாதி தானே! அவர் எந்தக் கடவுளை அடையாளம் காட்டிச் சென்றார். இந்த உலகம் அவரையே கடவுளாக்கிவிட்டது! சமணத் துறவிகளிலும் பலர் நாத்திகவாதிகளே! அவர்களில் குணரத்னா புகழ் பெற்றவர்! இந்த வரிசையில் தமிழ் சமூகம் உய்ய வந்த ஒப்பற்ற நாத்திகரே பெரியார்! அவரோடு நிறைய முரண்படுகிறேன்.ஆயினும்,சென்ற நூற்றாண்டில் அவர் நம் சமூகத்தில் வரலாற்றின் தேவையாக வந்தவர்.அவர் ஆற்றிய தொண்டு வேறெவராலும் செய்யமுடியாததாகும்! மிகுந்த நன்றியோடு ஒவ்வொருவரும் நினைவு கூறத்தக்கதாகும்! அவர் ஆற்றிய தொண்டின் விளைவே இன்றைய ஆட்சியாளர்கள் தாங்கள் அனுபவிக்கும் அதிகாரம் என்பதை மறந்துவிடக் கூடாது!

இந்த அளவுக்கு நிதானமிழந்தவர்களின் கையில் அதிகாரம் இருப்பது அதி ஆபத்தானது என்றே தோன்றுகிறது. சகிப்பு தன்மைக்கு இலக்கணமான இந்திய சமூகத்தில்,குறிப்பாக தமிழகத்தில் கறுப்பர் கூட்ட சுரேந்திரன் மீதான குண்டர் சட்ட அதிகார அத்துமீறல், ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கறையே! இதை அனைத்து ஜனநாயக சக்திகளும் முழுமூச்சோடு கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.