இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! காரணம் என்ன?

திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தற்போது வரை அண்ணா அறிவாலயம் பக்கமோ அல்லது மு.கஸ்டாலின் வீடு இருக்கும் சித்தரஞ்சன் சாலை பக்கமோ கனிமொழியை பார்க்க முடியவில்லை.


மே 2ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு பிற்பகலுக்கு பிறகு முடிவுகள் தெரிய ஆரம்பித்தன. தமிழகத்தில் திமுக ஆட்சி என்கிற நிலை உறுதியான நிலையில் பிரபல ஊடகங்கள் தரப்பில் இருந்து கனிமொழியை தொடர்பு கொண்டு அவரது கருத்தை அறிய முற்பட்டனர். ஆனால் கனிமொழி யாரிடமும் பேச மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். இது தவிர திமுக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த வட இந்திய தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேலையிலும் கனிமொழி பிசியாக இருந்தார்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் திமுக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து தலைவர்கள் செய்த ட்வீட்டில் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்ட ட்வீட்டுகளை மட்டுமே கனிமொழி டேக் செய்து நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். அத்தோடு திமுக வெற்றி தொடர்பாக மே 2ந் தேதி முழுவதும் கனிமொரி எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்கவில்லை. வெற்றி உறுதியான நிலையில் திமுக நிர்வாகிகள் அனைவரும் மு.க.ஸ்டாலின் வீட்டை நோக்கி படையெடுத்தனர். ஆனால் கனிமொழி அங்கு செல்லவில்லை.

வெற்றி உறுதியான பிறகு மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடம் சென்ற நிலையில் அங்கும் கனிமொழி வரவில்லை. திமுகவின் மகளிர் அணிச் செயலாளர் என்பதை தாண்டி கனிமொழி கலைஞரின் மகள். அப்படி இருந்தும் அவர் திமுகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வராதது பலரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது. தமிழகத்தில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்த மூன்று முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதி மற்றும் கனிமொழி. இவர்களில் பிரச்சாரத்தின் போது எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் சிறப்பாக பிரச்சாரம் செய்தவர் என்கிற பெயர் கனிமொழிக்கு கிடைத்திருந்தது.

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 234 தொகுதிகளிலும் கனிமொழி பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவர் மிஸ்ஸிங். இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து கனிமொழி ஒரு ட்வீட் போட்டிருந்தார். இது பலரை மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது. பிறகு சற்று தாமதமாக மு.க.ஸ்டாலினை தளபதி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் கனிமொழி. இதன் பிறகே வட இந்திய ஊடகங்களுக்கு கனிமொழி பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் தமிழ் ஊடகங்களை அவர் கண்டுகொள்ளவில்லை.

இவ்வளவிற்கு பிறகும் கூட கனிமொழியை அண்ணா அறிவாலயத்தில் பார்க்க முடியவில்லை. விசிக தலைவர் திருமாவளவன் ஒரே நாளில் இரண்டு முறை ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால் கனிமொழி ஒரு முறை கூட செல்லவில்லை. அதே சமயம் உதயநிதி ஸ்டாலின் கனிமொழி வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த புகைப்படங்களை

கூட உதயநிதி தரப்பு தான் வெளியிட்டது. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை வெளியிடவில்லை. கொண்டாட்டத்தில் ஈடபட வேண்டிய நேரத்தில் கனிமொழி கப்சிப் என இருப்பதற்கான காரணம் குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

தேர்தல் முடிவகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே கனிமொழியின் ஆதரவாளர்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளனர். ஆனால் கனிமொழி யாரையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டதாக சொல்கிறார்கள். வந்த ஒன்று இரண்டு பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் கனிமொழியின் எதிர்பார்ப்புகள் என்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வெற்றிக்கு காரணம் ஸ்டாலின், உதயநிதி தான் என்கிற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் தேர்தல் வரை பயன்படுத்தப்பட்ட கனிமொழியின் பெயர் வெற்றிக்கு பிறகு பயன்படுத்தப்படவில்லை என்று அவர் நினைக்கிறார்.

அது தவிர தனது ஆதரவாளர்கள் பலருக்கு எம்எல்ஏ சீட் கனிமொழி கேட்டிருந்தார். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எம்எல்ஏ சீட் கிடைத்தது. தற்போது அவர்கள் அனைவரும் வென்றுவிட்டனர். அவர்களுக்கு அமைச்சர் பதவி பெற்றுக் கொடுக்கும் முனைப்பில் கனிமொழி இருப்பதாக கூறுகிறார்கள்.

இதனால் தான் வெற்றி பெற்ற பிறகு ஒரேடியாக ஒட்டாமல் எட்டி நின்று கனிமொழி காய் நகர்த்துவாகவும் இது தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுக்கும் ஒரு டேக்டிக்ஸ்சாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது தனது அமைதியே செய்தியாகும் போது தான் பேசினால் என்ன ஆகும் என்பதை உணர்த்த அவர் இப்படி இருக்கலாம் என்கிறார்கள்.