இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி...! ஆ.ராசா அப்செட்..!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் சரி, ஆளுநரை ஸ்டாலின் சந்தித்த போதும் சரி பொன்முடி, எ.வ.வேலு மற்றும் ஆ.ராசாவை அங்கு பார்க்க முடியவில்லை.


சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை ஸ்டாலினுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் பொன்முடி மற்றும் எ.வ.வேலு. இதே போல் ஆ.ராசாவையும் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு அருகே அடிக்கடி பார்க்க முடியும். கே.என்.நேரு, பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு அண்மையில் தான் திமுகவில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.பாலுவிடம் இருந்த திமுக முதன்மைச் செயலாளர் பதவியை பறித்து அதனை கே.என்.நேருவுக்கு வழங்கினார் ஸ்டாலின். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்முடி மற்றும் ஆ.ராசாவை திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமித்தார் ஸ்டாலின்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இது அனைத்தும் மாறிவிட்டது. திமுக வெற்றி என்று அறிவிக்கப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலின் இல்லத்தில் தற்காலிகமாக முதலமைச்சருக்கான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் நிர்வாக பொறுப்பை திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஏற்றுக் கொண்டார்.

இதே போல் கட்சிக்காரர்கள் யார் யாரை ஸ்டாலின் சந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பிற்கு கே.என்.நேரு வந்துவிட்டார். துரைமுருகன் திமுக எம்எல்ஏக்களின் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே ஸ்டாலினை அணுகுமாறு அரண் அமைத்துவிட்டார். இதே போல் டி.ஆர்.பாலுவும் ஸ்டாலின் வீட்டை விட்டு நகர்வதே இல்லை.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற மேடையில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியோ, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசாவோ, பொன்முடியோ ஏற்றப்படவில்லை. இதில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் எம்பிக்கள் என்பதால் கூட்டத்திற்கு அழைக்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் கட்சியின் பொருளாளர் என்கிற அடிப்படையில் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திமுக எம்எல்ஏக்கள் கூட்ட மேடையில் நின்று கொண்டிருந்தனர். இதே முன்னுரிமையில் கனிமொழி மற்றும் ஆ.ராசாவை ஏன் அழைக்கவில்லை என்பதற்கான விளக்கம் இல்லை.

அதே சமயம் கட்சியில் சீனியர்களான பொன்முடி, எவ வேலு ஆகியோர் எம்எல்ஏக்களாக இருந்தும் மேடையில் ஏற்றப்படவில்லை. தொடர்ந்து ஆளுநருடனான சந்திப்பின் போதும் எவ வேலு, பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் மிஸ் ஆகியிருந்தனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தை மேடையில் இருந்து நடத்திய துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மட்டுமே ஸ்டாலினுடன் ஆளுநரை சந்தித்தனர்.

இதன் மூலம் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைய உள்ள திமுக அரசில் அதிகாரம் பொருந்தியவர்களாக துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ் பாரதி மற்றும் கே.என்.நேரு அடங்கிய நால்வர் அணி இருக்கும் என்பது கண் கூடாக தெரிகிறது.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியின் போது சசிகலா – ஜெயலலிதா இடையே பிரச்சனை வெடித்தது. அப்போது கட்சியை நிர்வகிக்க ஓபிஎஸ், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரை ஜெயலலிதா நியமித்தார். இவர்கள் நால்வர்அணி என்று அப்போது அதிமுகவினரால் பரபரப்பாக பேசப்பட்டது. அதே பாணியில் தற்போது திமுகவில் உருவாகியுள்ள நால்வர் அணி அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.