மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்! யார் யார் தெரியுமா?

திமுகவில் நீண்ட காலமாக விசுவாசமாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த எட்டு பேரை அமைச்சரயில் மு.க.ஸ்டாலின் சேர்த்துள்ளதாக திமுகவிற்குள் புகைச்சல் எழுந்துள்ளது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 8 பேர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள் என்கிற விவரம் தெரியவந்துள்ளது. எ.வ.வேலு கடந்த கலைஞர் ஆட்சிக்காலத்திலேயே அமைச்சராக இருந்தவர் என்றாலும் இவர் அதிமுகவில் இருந்து பிறகு திமுகவிற்கு வந்தவர். ஒரு கால கட்டத்தில் மறுபடியும் எப்படியாவது அதிமுகவில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஜெயலலிதாவின் விசுவாசி போல் தன்னை காட்டிக் கொண்டு வலம் வந்தவர். தற்போது மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமாகி அமைச்சரவையில் மறுபடியும் இடம்பிடித்துள்ளார் என்கிறார்கள்.

இதே போல் கலைஞர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் ஒரு காலத்தில் தன்னை ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொண்டவர். பிறகு திமுகவில் சேர்ந்து தற்போது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். புதுக்கோட்டை திருமயம் தொகுதியில் வெற்றி பெற்ற ரகுபதியும் அமைச்சராகியுள்ளார். இவரும் அதிமுகவில் ஜெயலலிதாவின் விசுவாசியாக வலம் வந்து பிறகு திமுகவில் இணைந்தவர். கரூர் தொகுதியில் வென்ற செந்தில் பாலாஜியை பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதிமுகவில் இருந்து பிறகு தினகரனுடன் சென்று பிறகு திமுகவில் இணைந்து தற்போது மின்சாரத்துறை எனும் மிக முக்கியமான துறைக்கு அமைச்சராகியுள்ளார்.

இதே போல் ஜெயலலிதாவின் 1991 முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் அமைச்சராக வலம் வந்து பிறகு திமுகவில் இணைந்து இளையான்குடி எம்எல்ஏ ஆகி பிறகு மறுபடியும் அதிமுகவிற்கு சென்று நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் தோற்று மறுபடியும் திமுகவிற்கு வந்தவர் ராஜகண்ணப்பன். அதன் பிறகு மறுபடியும் அதிமுகவில் இணைந்து 2019 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திமுகவில் இணைந்தவருக்கு முதுகுளத்தூர் தொகுதியை ஸ்டாலின் வழங்கினார். அங்கு வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன் தற்போது போக்குவரத்துறை அமைச்சராகியுள்ளார்.

ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு சென்னையில் எல்லாமுமாக இருந்தவர் பி.கே.சேகர்பாபு. பிறகு திமுகவில் இணைந்து கடந்த பத்து வருடங்களாக ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்து தற்போது அமைச்சராகியுள்ளார். ஆனால் சேகர்பாபு என்றால் ஜெயலலிதா விசுவாசி தான் என்கிற பெயர் என்றுமே மாறப்போவது இல்லை. இதே போல் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மறுபடியும் அமைச்சராகியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதாவிற்காக திருச்செந்தூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பகிரங்கமாக அறிவித்து திமுகவில் இருந்து கொண்டே அதிமுகவிற்கு விசுவாசத்தை காட்டிய அனிதாவிற்கு ஸ்டாலின் தற்போது அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்.

இதே போல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ள முத்துச்சாமிக்கும் வீட்டு வசதித்துறை எனும் பசையுள்ள துறையை ஒதுக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததோடு கட்சிக்கு இத்தனை காலம் உழைத்த சீனியர்களுக்கு சாதாரண துறைகளை கொடுத்துவிட்டு புதிதாக சேர்ந்த செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன், முத்துச்சாமி போன்றோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது திமுகவினரையே அதிருப்தி அடைய வைத்துள்ளது. மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு எம்எல்ஏ பதவி கொடுப்பது சரி, ஆனால் கட்சிக்காக காலங்காலமாக உழைப்பவர்களை ஒதுக்கிவிட்டு அமைச்சர் பதவியை தூக்கி அவர்களுக்கு கொடுத்தால் உழைப்பவர்களுக்கு என்ன மரியாதை என்று சற்று பலமாகவே திமுகவினர் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.