அதிமுகவில் கொங்கு VS முக்குலம்..! ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..! டிடிவி அனுப்பிய தூது!

அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் தேர்வு விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கிய நிலையில் பின்னடவை சந்தித்துள்ள ஓபிஎஸ்சுக்கு உதவ சசிகலா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கட்சிப் பதவிகளிலும் சரி ஆட்சி அதிகாரத்திலும் சரி முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஜெயலலிதா பாணி. சசிகலா சிறை செல்வதற்கு முன்பு வரை கூட அதே நிலை தான் நீடித்தது. ஆனால் சசிகலா சிறை சென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு அதிமுகவில் அதிகார மாற்றம் நிகழ்ந்தது. அதுநாள் வரை அதிகாரமிக்கவர்களாக திகழ்ந்த முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் முக்கியத்துவம் இழந்தனர்.

கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கோவையை சேர்ந்த எஸ்பி வேலுமணி, நாமக்கல்லை சேர்ந்த தங்கமணி முதலமைச்சருக்கு வலது இடது கரமாகினர். உடுமலை ராதாகிருஷ்ணனை சீண்டினார் என்கிற காரணத்திற்காக முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த ராமநாதபுரம் அமைச்சர் மணிகண்டனிடம் இருந்து அமைச்சர் பதவியையே பறித்தார் எடப்பாடி. இதே போல் சென்னை மாநகர ஆணையராக கொங்கு பகுதியை சேர்ந்தவரை நியமித்தனர். இப்படி எல்லாம் கொங்கு மயமாகிக் கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்விலும் எடப்பாடி பழனிசாமியே வென்றார்.

சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா அதிமுகவிற்கு காலை வாரிய நிலையில் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்கள் அதிமுகவிற்கு அரணாக இருந்து அவமானத்தை தவிர்த்துக் கொடுத்தது. இதன் பின்னணியில் நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தின் கை ஓங்கி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். எவ்வளவோ முயன்றும் ஓபிஎஸ்சால் எதிர்கட்சித்தலைவர் ஆக முடியவில்லை. அத்தோடு கட்சியும் எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் இதனை ஏற்றுக் கொண்டாலும் அதிமுகவை முழுமையாக எடப்பாடி வசம் செல்லாமல் காப்பாற்ற ஓபிஎஸ் முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.

கட்சி, ஆட்சி என்று வந்துவிட்டால் கொங்கு மண்டல நிர்வாகிகள் எவ்வித தயவு தாட்சன்யமும் இல்லாமல் எடப்பாடி பின்னால் அணிவகுத்துவிடுகின்றனர். ஆனால் தென் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் பின்னால் வரத் தயங்குகின்றனர். இதற்கு காரணம் அந்த நிர்வாகிகள் பெரும்பாலும சசிகலாவால் கட்சியில் அடையாளம் காட்டப்பட்டு வளர்ந்தவர்கள். மேலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பிற்கு பிறகு கூட சசிகலா ஆதரவாளர்கள் என்று கருதி அவர்களை ஓபிஎஸ் ஒதுக்கியே வைத்திருந்தார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு கூட ஓபிஎஸ்சால் பதவியை மறுபடியும் பெற்றுத்தர முடியாத நிலையே இருந்தது.

இதன் காரணமாகவே ஓபிஎஸ்சை ஆதரிக்க தென் மாவட்டஅ திமுக நிர்வாகிகள் தயங்கி வருகின்றனர். அதே சமயம் கட்சி முழுக்க முழுக்க எடப்பாடி வசம் செல்வதை சசிகலா விரும்பவில்லை என்கிறார்கள். கட்சியில் ஓபிஎஸ் – இபிஎஸ் என்கிற பிரச்சனை இருந்து கொண்டிருந்தால் தான் தன்னால் மறுபடியும் அதிமுகவிற்குள் நுழைந்து அதிகாரத்தில் அமர முடியும் என்று அவர் கருதுவதாககூறுகிறார்கள். இதனால்அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்கள் சிலரை ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக செயல்படும் படி சசிகலாக கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்கிறாக்ள். அதன்படி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தற்போது ஓபிஎஸ்சிடம நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதே போல் ஓபிஎஸ்சை தென்மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வரிசையாக சென்று சந்தித்து வருகின்றனர். அப்படி வந்தவர்களில் மிக முக்கியமான நிர்வாகி ஒருவர் டிடிவி கூறியதாக சில செய்திகளை ஓபிஎஸ்சிடம் கூறியதாகவும் அதைப்பற்றி பிறகு பேசலாம் என்று டிடிவிக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து செய்தி சொல்லி அனுப்பியதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது.