காதல் தோல்வி! கிரிக்கெட் வீரர் தற்கொலை! கிரவுண்டில் உடலை வைத்து நெகிழ வைத்த நண்பர்கள்!

காதல் தோல்வியால், கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் அழகப்பன் (27 வயது). உள்ளூர் கிரிக்கெட் வீரரான இவர், தஞ்சாவூர் அரண்மனை அருகே உள்ள பீட்டர் பள்ளி மைதானத்தில் தினமும் காலை, மாலை சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இதுதவிர, தனக்கென தனி அணி ஏற்படுத்திக் கொண்டு,  சுற்றுப்புறங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில், பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இவரது கிரிக்கெட் விளையாட்டு திறமைக்காகவே, ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. 

காதல் விரக்தியில் கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்ட அழகப்பன், சமீபத்தில் எலி மருந்து சாப்பிட்டு, தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அவரது நண்பர்கள், கதறியழுதனர். அழகப்பனின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு, தஞ்சை பீட்டர் பள்ளி மைதானத்திற்குக் கொண்டு வந்தவர்கள், அங்கேயே ஒரு ரவுண்ட் அடித்தார்கள். மைதானத்தில் சடலத்தை இறக்கி வைத்து, உருக்கமாகக் கதறி அழுதார்கள்.

ஏராளமான உள்ளூர் இளைஞர்கள் சூழ, அழகப்பனின் உடல் மைதானத்தை வலம் வந்தது. பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றது. 

அழகப்பனின் ஆம்புலன்ஸ் முன்னும், பின்னும் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் கதறியழுதபடி தஞ்சை வீதிகளில் சென்ற காட்சி காண்போரை உருக்கும் வகையில் இருந்தது.  குறிப்பாக, அழகப்பனின் சடலத்தை மைதானத்தில் இறக்கி வைத்த நண்பர்கள், எழுந்து வாடா, கிரிக்கெட் விளையாடலாம் என்று கூறி நெகிழ்ச்சியுடன் பிரியா விடை கொடுத்தனர். இச்சம்பவம் தஞ்சை சுற்றுவட்டார இளைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.