பா.ஜ.க.வுக்கு வெற்றிகரமான தோல்வியாம்..! சொல்வது சுப்பிரமணியம் சுவாமிப்பா

தில்லியில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து இன்று பேசியிருக்கும் சுப்பிரமணியம் சுவாமி, ‘‘குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் ஆம் ஆத்மி வெற்றி அடைந்துள்ளது.


கடந்த முறையைவிட பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு சதவிகிதமும், கூடுதல் இடங்களும் கிடைத்துள்ளது. ஆகவே உண்மையாகவே பா.ஜ.க.தான் வெற்றி பெற்றுள்ளது. கெஜ்ரிலால் கூடுதலாக சில இடங்களை இழந்துவிட்டார்’’ என்று சொல்லியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பா.ஜ.க. ஆட்கள் சிலரும் இந்த வெற்றிகரமான தோல்விகளுக்கு என்னமாய் காரணம் சொல்கிறார்கள் தெரியுமா?

இந்திய மாநிலத் தேர்தல் அனைத்திலும் பெண்கள் மிக முக்கியமான சக்தி. அவர்களது வாக்குகளைக் கவர்வதில் வெற்றி பெறுபவர்கள் நிச்சயம் வெற்றிபெறுகிறார்கள். தில்லியில், ஆம் ஆத்மி கட்சி, பெண்களுக்குச் செய்தவை கவனத்துக்குரியவை. இலவச பேருந்து பயணம், 20,000 லிட்டர் குடிநீர், 200 யூனிட் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி என்பவை அவர்களது பொருளாதார வளத்துக்கு நிச்சயம் உதவியுள்ளது.

அத்துடன், கூடுதல் சி.சி.டி.வி. கேமராக்கள், மொஹல்லா கிளினிக்குகள், பள்ளிக்கல்வி மேம்பாடு ஆகியவை பயன் அளித்துள்ளன. ஒரு விஷயம் உண்மை. ஒவ்வொரு நாளும் பயணச் செலவே 100 ரூபாய் வரை ஆகிறது. பெண்களுக்கு அச்செலவு இல்லை எனும்போது, அது அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி தற்போதைய தேர்தலில் அறிவித்துள்ள மூன்று திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியவை. கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி, 21 வயது ஆகும் பெண்களுக்கு 2 லட்ச ரூபாய் டெபாசிட், கைம்பெண்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ. 50 ஆயிரம் என்பவை, நிச்சயம் தில்லி வாழ் பெண்களுக்கு நம்பிக்கையளித்திருக்கும்.

மக்களும் அடிப்படை உணவு, உடை, உறைவிடம் ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்களே தவிர, சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற பிரச்னைகளை அதிகம் பொருட்படுத்தவில்லை.

என்னமா பேசுறாங்கப்பா...