மரண வாசலில் இருந்து முறையீடு ! என் நடவடிக்கைகள் நாட்டுக்கு கேடல்ல ! - முஷரப்

தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மேல்முறையீடு செய்துள்ளார்.


1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முஷாரஃப், அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃபை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தினார். 2001ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பேற்ற பர்வேஸ் முஷாரப் 2007-ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்தார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி, உச்சநீதிமன்ற நீதிபதிகளை சிறையிலடைத்தார். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது. அதன் பின்னர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த பர்வேஸ் முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி துபையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அரசியல் சாசனத்தை முடக்கி தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் பர்வேஸ் முஷாரப்புக்கு டிசம்பர் 17-ஆம் தேதி தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஒருவேளை தண்டனை விதிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டால், அவரது உடலை பொது இடத்தில் 3 நாள்களுக்கு தொங்கவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீா்ப்பில் தெரிவித்திருந்தனா்.

இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்து முஷாரப் லாகூர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேசத் துரோக வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தண்டனையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன.

அந்தத் தீா்ப்பு அவசர அவசரமாக எழுதப்பட்டுள்ளது என்றும், தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தாலும், அந்த நடவடிக்கைகள் தேசத்தின் நலனுக்கு எதிராது என நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.