முள்ளும் மலரும்! காளி ரஜினியின் நிஜ கதாநாயகன் மகேந்திரன்!

ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கினார் மகேந்திரன்.


படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைக்க பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். "முள்ளும் மலரும்'' மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.

புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை "உதிரிப்பூக்கள்.'' படமாக இயக்கினார். சிறந்த கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன் -சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' பட்த்கை இயக்கினார். 12-12-1980-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.

"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.

1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது. தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை பட்த்தை எடுத்தார். தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின், இயக்கத்தில் உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.