நீ முதலில் உட்கார் பெண்ணே! கேரள அரசு திடீர் சட்டம்!

துணிக்கடைக்குச் செல்லும் அனைவருமே அங்கு பணியாற்றும் பெண்களும் ஆண்களும் ஒரு நிமிடம்கூட உட்கார முடியாமல் அலையும் வேதனையைப் பார்த்திருப்போம்.


அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தந்திருக்கிறது கேரள் அரசு. ஆம், துணிக்கடைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு அமர ஒரு இருக்கை தரவேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கேரள கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்திருக்கிறது. இது ஒரு விஷயமா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் இதுதான். ஆம், தொடர்ந்து நின்று கொண்டிருப்பவர்களுக்குதான் அந்த வலி தெரியும். 

இப்போது கார்ப்ரேட் வணிகம், துணிக்கடைகளில், நகைக்கடைகளில், எலக்ட்ரானிக் கடைகளில், செருப்புக்கடைகளிலென எல்லா இடங்களிலும் பெண்களை நிற்கவைத்தே வேலைவாங்குகிறது. குறைந்த கூலிக்கு வேலைசெய்வார்கள். எதிர்த்துப் பேசமாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். என்பது மட்டுமில்லை. எட்டுமணி நேரமும் நின்றபடி பணிசெய்வார்கள் என்பவைதாம், பெண்களை வேலைக்கு விரும்பும் ரகசியம்!

'பல மணி நேரம் தொடர்ந்து நிற்பதால் வெரிகோஸ் வர வாய்ப்புள்ளது. கால்கள் வீங்கும். நரம்புகள் பாதிக்கும். உடலின் கீழ்ப்குதி கடுமையாக பாதிக்கப்படும். மாதவிடாய் காலங்களில் தீவிர மன அழுத்தத்தோடு, உடல் நிலையும் பாதிப்புக்குள்ளாகும். சீறுநீர்க் கழிப்பதை அடக்குவதால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு’ என்பதுதான் உண்மை.

ஒரு கடைக்குள் நுழையும்போது சில பெண்கள் வரிசையாக நின்று கும்பிட்டு வணங்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். நாம் பதிலுக்கு வணக்கம்கூட சொல்லாமல் அலட்சியமாக கடைக்குள் நுழைகிறோம். அந்த வணக்கத்திற்குப் பின்னே உட்காராமல் நிற்கும் பெரும் வலி இருப்பதை கேரள அரசு உணர்ந்திருக்கிறது. இப்படி ஒரு சட்டம் போட்டு பெண்களின் வலியைத் துடைத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

தமிழகத்தில் அப்படியொரு சட்டம் வரட்டும், பெண்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.