கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய்! கொள்ளை வழக்கின் போலீஸ் அறிக்கை! பரபரப்பு ரிப்போர்ட்!

கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் இருப்பதாக நினைத்து கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.


ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் இருக்கிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். வழக்கில் சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ், மனோஜ் சமி மற்றும் பிஜின் குட்டி கைது செய்யப்பட்டு இருநதனர். 

கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு பின்னர் உதகையில் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஜாமீனில் இருந்த சயான் மற்றும் வளையார் மனோஜ் ஆகியோர், வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

வழக்கில் கைதான சயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மற்ற 8 பேரும் ஜாமீனில் உள்ளனர். 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உதகையில் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜர் ஆனார்கள்.

2 ஆண்டுகளுக்குப் பின்னர், போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, உட்பட 13 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 200 கோடி ரூபாய் இருப்பதாக நினைத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும், அதை தடுக்க முயன்ற காவலாளி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சயான், வளையார் மனோஜ் உட்பட 10 பேரும், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். 

சான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் வழக்கு குறித்து கூறும்போது கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் கொள்ளையடிக்கச் சென்றதாக போலீஸார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதால் பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததை போலீஸார் ஒப்புக்கொள்கிறார்களா என கேள்வி எழுப்பினார். போலீசார் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் ஏதும் அளிக்காமல் சென்றுவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள், வரும் 13-ம் தேதி பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.