ஞானத்துடன் செயல்படனும்! இல்லனா கஷ்டம் தான்! எடப்பாடி அரசுக்கு ஜக்கி வாசுதேவ் அட்வைஸ்!

’மழைநீர் சேகரிப்பு’ திட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சத்குரு கூறியிருப்பதாவது: நீரை சேமிக்க வேண்டும் என்ற ஞானம் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம். இதற்காக தமிழக அரசு ‘மழைநீர் சேகரிப்பு’என்ற சிறப்பு திட்டத்தை வலியுறுத்தி விழிபுணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

நாம் எல்லோரும் இதை புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டில் நீருக்கு இருக்கும் ஒரே ஒரு மூலம் மழை தான். மழை பெய்யும் போது அந்த தண்ணீர் பூமியால் உறிஞ்சப்பட்டு நீண்ட நாட்களுக்கு இருந்தால் தான் அதை நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்.

தமிழகத்தில் தோராயமாக 45 முதல் 60 நாட்களுக்கு மட்டும் தான் மழை பெய்கிறது. 60 நாட்களில் கிடைக்கும் மழை நீரை 365 நாட்களுக்கு நாம் மண்ணில் பிடித்து வைத்துகொள்ள வேண்டும். அதற்கு அனைத்து நிலைகளிலும் நாம் மழைநீரை சேமிக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக மரங்கள், செடி, கொடிகள், புல்வெளிகள் என அனைத்து விதத்திலும் தேவையான அளவு பசுமையை உருவாக்க வேண்டும். 

இதற்கு சிறந்த வழி கிராமங்களில் விவசாயிகள் வேளாண் காடு வளர்க்கும் முறைக்கு மாற வேண்டும்; நகரங்களில் மழைநீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இதற்காக அனைத்து தமிழ் மக்களும் தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை கட்டாயம் செய்ய வேண்டும். இந்த ஞானம் இல்லாமல் நாம் செயல்பட்டால் நம் குழந்தைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், நான் தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஆதரிக்கிறேன்.

இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார்.

முன்னதாக, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து மாண்புமிகு தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும், அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“நதிகளை மீட்போம், காவேரிகூக்குரல் போன்று மக்களின் மேல் அக்கறை கொண்டு நீர்வளம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் மதிப்பிற்குரிய சத்குரு அவர்களை மழைநீர் சேகரிப்பு சவாலில் பங்கெடுத்து அதன் அவசியத்தை உணர்த்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.