எத்தியோப்பிய விமான விபத்து! 2 நிமிடம் லேட்டாக வந்த நபர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!

157 பேரை பலி கொண்ட எத்தியோப்பிய விமானத்துக்கு 2 நிமிடம் தாமதமாக வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம், நேற்று எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபிக்கு 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் புறப்பட்டது. இந்த விமானம் பறக்கத் தொடங்கி 50-வது கிலோமிட்டரில் பிஷோப்டு என்ற இடத்தில் விபத்துக்குக்குள்ளானது 

இந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர்  உட்பட கென்யா, கனடா, சீனா, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, எகிப்து, நெதர்லாந்து, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்த 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ் என்பவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அந்தோனிஸ் விமானநிலையத்திற்கு வந்த போது அதற்கு 2 நிமிடங்கள் முன்பாகவே புறப்பாடு கேட் மூடப்பட்டு விட்டது. இதனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. 2 நிமிடம்தானே  என்று கூறி வாக்குவாதம் செய்த நிலையில் அதிகாரிகள் அவரை அனுமதிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். 

இதுகுறித்து அந்தோனிஸ் தனது முகல் பதிவில் தான் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள் மீது அதிருப்தியில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து தன்னை விமான நிலைய காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகல் நீங்கள் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அப்போதுதான் விமானம் விபத்தில் சிக்கி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததை அறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்தோனிஸ் தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து தன்னிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சரிபார்த்துவிட்டு விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள அந்தோனிஸ் தனது டிக்கெட்டையும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.