சிறுபான்மை மக்களை கைவிடவே மாட்டாராம்! சொல்றது யாரு? நம்ம எடப்பாடி பழனிசாமிதான்!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க. போர்க்குரல் எழுப்பிவரும் வேளையில், நாங்கள்தான் உண்மையான சிறுபான்மையினர் பாதுகாவலர் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


சிறுபான்மை மக்களின் அரணாக திகழ்ந்த மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்களும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வகுத்துத் தந்த பாதையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அரசு, சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் பேரரணாக விளங்கி வருகிறது. இந்த பேரியக்கத்தின் தலைவர்கள் வகுத்துத் தந்த பாதையில் ஆட்சி செய்யும் இந்த அரசு, எக்காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.  

நான் முன்னரே தெரிவித்தபடி, குடியுரிமை (திருத்த) சட்டத்தினால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்களிடையே அவர்களது குடியுரிமை பாதிக்கப்படும் என்று வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இந்த பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்று நான் தமிழ்நாட்டு மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குடியுரிமை (திருத்த) மசோதாவின்மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போதும், அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள், இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, எடுத்துரைத்துள்ளனர்.

நான் அண்மையில் புதுதில்லிக்கு சென்றபோதும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடமும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களிடமும் நேரில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.

மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசு, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் அக்கறையோடு தொடர்ந்து செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தவறான பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் நமது மாநிலத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.