ஸ்டாலின் இல்லேன்னா கம்யூனிஸ்ட் இல்லை! பரிதாபமோ பரிதாபம்!

கம்யூனிசம் என்பதை உலகிற்கு வலிமையுடன் எடுத்துக்காட்டியவர் ரஷ்யாவின் ஸ்டாலின் என்றால், இந்தியாவில் இப்போது கம்யூனிசத்திற்கு உயிர் கொடுத்திருப்பதும் தமிழக ஸ்டாலின்தான். தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறவில்லை என்றால், அவர்கள் கதி அதோகதி ஆகியிருக்கும் என்பதுதான் உண்மை.


இந்தத் தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் கம்யுனிஸ்டுகள் மொத்தமே 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். அதிலும் நான்கு தொகுதிகள் தமிழகத்தில் தி.மு.கவின் பெருந்தன்மையால் கிடைத்ததுள்ளது. மக்கள் தொண்டிலிருந்து வெகுதூரம் விலகி, பணத்தின் பக்கம் அவர்கள் சென்று கொண்டுள்ளனர் கம்யூனிஸ்டுகளில் பலர் என்பதையே இந்த தோல்விகள் பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன. ஏனென்றால் ஈ.எம்.எஸ்.அச்சுதானந்தன் போன்றவர்கள் காலத்தில் இது போன்ற ஒரு தோல்வியை கேரள மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு தந்ததில்லை.

34 ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்கம் இன்று மதவாத சக்திகளின் வேட்டைக்காடாக மாறிவருகிறது.  ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் மோடியின் தலைமையை ஏற்று நிறம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

மம்தாவின் அடாவடி அரசியல் அங்கே கம்யூனிஸ்டுகளையும், காங்கிரசாரையும் காலி செய்து, காவிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துக் கொண்டுள்ளது. இதை முறியடிக்கும் வல்லமையற்று போனது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி இனியாவது ஆழ்ந்து யோசிக்க வேண்டும். கடந்தகால தவறுகளை கண்ணியத்துடன் கலைந்து எறிய வேண்டும். அப்படி செய்யாமல் ஏதேனும் ஒரு கட்சியின் முதுகில் ஏறி ஜெயித்துக்கொண்டே இருக்கலாம் என்று கனவு கண்டால், அடுத்த முறை இதுவும் கிடைக்காமல் போய்விடும்.