முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக மக்களின் குறைகளைத் தீர்க்க மாநில அளவில் குறை தீர்ப்பு மேலாண்மை மையம் அறிவிப்பு!

இன்று தமிழக சட்டசபையில், முதலமைச்சர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டம் என்ற பெயரில் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ’’தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் என்று பல அமைப்புகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.

இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. அதனால் அனைத்து குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.

அதன்படி, ‘முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்’ என்பதை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் செயல்பட இருக்கிறது. இந்த மையங்களில் பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

 இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்பான தனத் குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும் என்ற நிலை ஏற்படுள்ளது.