எங்கே செல்லும் இந்த பாதை..? எழைகளைக் கைவிட்ட மத்திய, மாநில அரசுகள்.

டெல்லியின் நொய்டாவில், உத்திரப்பிரதேச எல்லையில் எக்கச்சக்கமாக பாதசாரிகள் குவிந்து வருகிறார்கள்.


ஒருசில சிறப்பு பேருந்துகளால் எந்த பயனும் நிகழ்ந்துவிடவில்லை. இப்படி வரும் மக்களை கல்வி நிலையங்களில் அனைவரும் உணவுடன் தங்க வைக்கப்படுவதாகவும், எவரும் மாநிலத்தை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் டெல்லி முதல்வர் கோரியுள்ளார். ‘எங்கள் மாநிலத்திற்கு திருப்பி அனுப்பினால் கரோனா ஆபத்து உள்ளது’ என அங்கேயே தங்கவைக்க பிஹார் முதல்வரும் வலியுறுத்தி உள்ளார்.

ஏழைகள் மற்றும் கூலித்தொழிலாளிகளின் நிலை பற்றி திட்டமிடாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நன்மை உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், உணவு, உறைவிடம் கிடைப்பதில் உறுதி இல்லையா? அல்லது தங்கள் வீட்டாருடன் போய் இருந்து கொள்ளலாம் எனக் கருதியோ பல நூறு கி.மீ நடைப்பயணம் முடிவிற்கு வராமல் உள்ளது.

இப்போதாவது அவர்கள் நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு மாநில அரசுகளின் முதல்வர்கள் மற்றும் மத்திய அரசும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டியது அவசரம்.

ஏனெனில், டெல்லியில் தனியாகச் சிக்கியுள்ள வேற்று மாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பல லட்சம் எனக் கணிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சிக்கியவர்களிடம் அரசு காட்டிய அளவிற்கான அக்கறை இந்த ஏழை கூலித் தொழிலாளர்கள் மீது காட்டப்படவில்லை என்பதுதான் வேதனை.

கடவுள் கைவிட்ட நிலையில், மக்களை அரசுகளும் கைவிட்டன். சொந்த நாட்டிலே அகதிகளாக திரியும் ஏழை மக்களுக்கு நாம் என்னதான் செய்ய முடியும்.