தப்பும் தவறுமாக எழுதலாமா முரசொலி..? காணொலி தவறை சுட்டிக்காட்டும் கவிஞர்.

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் காணொலியில் நடைபெறுவதாக ஃப்ளக்ஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை காணொளி என்று எழுதவேண்டும் என்று பலரும் சொல்லிவந்த நிலையில், காணொலிதான் சரியென்று மீண்டும் தன்னுடைய தப்புக்கு ஒரு சால்ஜாப்பு கூறியிருக்கிறது முரசொலி.


இந்த நிலையில், காணொலி என்பது தவறுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன். காணொளி சரியா, காணொலி சரியா என்னும் வழக்கு கடுமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை விளங்கிக்கொள்ள அவரவர்க்குத் தெரிந்த மொழிநோக்கு போதாது. மொழிச்சொற்றொடர்கள், மொழியடிப்படைகள் குறித்த ஆழ்ந்த பார்வை வேண்டும். 

இதனை விளக்கி முன்பே பலமுறை எழுதியுள்ளேன். இவ்வழக்கு நெருப்பாகப் பற்றி எரிவதால் மீண்டும் விரிவாகவே கூறி அமைகிறேன். தமிழில் ஒரு சொல்லை நம் விருப்பப்படியோ, பிறமொழி எப்படி வழங்குகிறதோ அவ்வழியிலோ ஆக்கிவிட முடியாது. ஆக்கவும் கூடாது. இதனை முதலில் தலைக்குள் ஏற்றுக. 

எடுத்துக்காட்டாக, ஒரு சொல்லுக்கு முன்னே அ என்ற ஒலியைச் சேர்த்தால் வடமொழியில் அதன் எதிர்ச்சொல் கிடைக்கும். 

நியாயம் – அநியாயம், நீதி - அநீதி, சுத்தம் - அசுத்தம். 

அவ்வாறே தமிழிலும் ஒரு சொல்லுக்கு முன்னே அ சேர்த்து புதிய எதிர்ச்சொல்லை உருவாக்கலாம் என்போமா ? ஒருபோதும் இல்லை. 

கல்வி – அகல்வி, நன்றி – அநன்றி என்று ஆக்கலாமா ? இயலாது. 

தமிழில் எதிர்ப்பொருள் உணர்த்தும் சொற்கள் எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதற்கு இலக்கணக் கூறுகள் இருக்கின்றன. எதிர்மறை இடைநிலைகள் இருக்கின்றன. பிறமொழிச் சொற்களைத் தமிழுக்கு ஆக்குகையில் தமிழின் சொல்லியல்புகளை தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நமக்குச் சொல்லுக்கும் இலக்கணம் இருக்கிறது. அதன்வழியே கொள்ளவேண்டிய பொருளுக்கும் இலக்கணம் இருக்கிறது. 

ஆங்கிலத்தில் சொற்கள் தோன்றுவதற்கு மொழி அடிப்படையும் இலக்கணமும் கந்தல் துணிக்கு ஒட்டுப்போட்டதுபோல் உதவுகின்றன. National Stock exchange Index fifty என்று இருந்தால் ஆங்கிலத்தில் Nifty என்று ஆக்கிக்கொள்ளலாம். இது எப்படி இருக்கிறது என்றால் “அம்மா அன்பாகக் கொடுத்த சேலை” என்ற பொருள் விரிவுள்ள தொடரை “அலை” என்று ஆக்கிக்கொள்வதைப்போன்றது. இவ்வாறு பற்பல ஆங்கில மொழியியல்புகளோடு பழகிப்போய்விட்ட நம்மவர்கள் தமிழ்ச் சொற்களைக் குலைத்து விளையாடத் துணிந்தது வெட்கக்கேடு. 

ஒரு சொல்லை உருவாக்குவதற்கு ஆங்கிலக் கண்ணாடியைத் தூக்கி எறிக. அந்தப் பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ்ச் சொற்றொடர் அமைப்புகளை இறுகப் பற்றிக்கொள்க. தமிழில் ஒரு சொல்லை உருவாக்கினால் அதற்கு இலக்கண வழியில் அதன் தன்மையைக் கூற வேண்டும். 

வெடிகுண்டு, பதுங்குகுழி, குடிநீர், எரிமலை என்று புதிதாய்ச் சொற்களை ஆக்கிப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவை வினைத்தொகைகளாய் அமைந்த இலக்கணக் குறிப்பையும் சொல்லியே ஆகவேண்டும். தேர்தல், கழிவு, கல்வி, தோல்வி என்று சொற்களை ஆக்கினால் அவை விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் எனல் வேண்டும். 

இலக்கணம் காட்டிய வழிப்படியே அவை சொற்கள் ஆகின்றன. திடீர், படீர், பளார், குபீர் என்பனவற்றைக்கூட இடைச்சொற்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியும். 

எல்லாமே ஒரு சொல்வரையறைக்குள் அடங்கவேண்டும் என்பது தெளிவு. சொல் வரையறைக்குட்பட்டால் பொருள் வழிமுறை உள்ளடங்கியிருப்பதும் கண்கூடு. ஊறுகாய் என்றால் நேற்றும் ஊறியது, இன்றும் ஊறுகிறது, நாளையும் ஊறும் என்று முக்காலப் பொருள் கொள்ள இடமிருக்கவேண்டும். காணொளி (காண் ஒளி) என்பதில் காண் வினைச்சொல். தமிழ் வினைச்சொல் மொழி. காண் என்று கட்டளையிடும் வினைவேரானது அவ்வினையோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான சொற்களுக்குத் தாய். 

காண் என்கின்ற வினைச்சொல்லே குறுக்கல் விகாரமடைந்து கண் என்று அத்தொழிற்படு உறுப்புக்குப் பெயராகிறது. காட்சி என்று தொழிற்பெயராகிறது. காணல், காண்பு என்று மேலும் தொழிற்பெயர்களை ஆக்கலாம். காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது. வினைத்தொகை. 

தமிழில் புதுச்சொல்லாய்க் கிடைப்பது ஒரு வினைத்தொகை என்றால் அதனைக் கண்ணில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனைக் காப்பாற்றுவதும் பயன்படுத்துவதும் தமிழைக் காப்பாற்றுவதும் ஆகும். 

காணொலி என்பதிலுள்ள ‘காண்’ ஒளியைக் குறிப்பது என்கின்றனர். காண் (ஒளி) ஒலி இரண்டையும் குறிக்குமாம். தமிழில் ஒளியையும் ஒலியையும் குறிக்க ஒரு தொடரை ஆக்கவேண்டுமென்றால் ‘ஒளியொலி’ என்று எளிமையாக ஆக்கிவிட்டுப் போகலாமே. சொல்லின்பம், ஓசையின்பம், எதுகை மோனை எல்லாம் அருமையாக வந்துள்ளனவே. காண் என்ற சொல்லுக்குப் போனது ஏன் ? அங்கே காண் என்பது காண்கின்ற செயல் தொடர்பான வினைச்சொல்தான் என்பது தெளிவு. காண்பது தொடர்பான வினைக்குறிப்பு தேவைப்பட்டதால்தான் காண் என்ற சொல்லுக்குச் சென்றார்கள். அதுவே சிறந்த முடிவும்கூட. ஏனென்றால் வினைச்சொல் அடிப்படை ஆயின் புதுச்சொல்லுக்கு அருமையான பொருள் வளம் கிடைக்கும். 

காண் ஒளி என்பது வினைத்தொகைதான். காண்கின்ற ஒளியைக் குறிக்கும். வீடியோக்கள் ஒளிவெளிப்பாடுகள். காணத்தகுந்த காட்சிக்கோவைகள். மின்னலும் ஒளிதான், சூரியவட்டமும் ஒளிதான். அவற்றைக் காண முடியாது. கண்போய்விடும். கூசி நொந்துவிடும். காணொளிகள் இன்பம் தரும். எந்தத் தொந்தரவும் இல்லாதவை. கலைத்திளைப்பு. அவற்றை முக்காலத்தும் காணலாம். பயனுறலாம். 

காண் ஒளியை வினைத்தொகையாய்ப் பொருள் விரிக்கிறோம். இலக்கணக்குறிப்பு கூறுகிறோம். காண் ஒலியை என்ன செய்வது ? எப்படிப் பொருள் விரிப்பது ? காண்கின்ற ஒலி என்று அதனையும் வினைத்தொகை எனலாமா ? சரி. வினைத்தொகையைக் “காலங்கரந்த பெயரெச்சம்’ என்கிறது நன்னூல். வினைத்தொகையில் வருகின்ற வினைச்சொல் அடுத்து வரும் பெயர்ச்சொல்லை விளக்கி அமைவது. 

ஊறுகாய் என்றால் காயை விளக்குகிறது – காய் ஊறுகிறது. எரிமலை என்றால் மலையை விளக்குகிறது – மலை எரிகிறது. காண் ஒலி என்றால் ஒலியை விளக்குகிறது – ஒலி காணப்படுகிறது. ஒலியைக் காண்கிறோமாம். ஒலியை எப்படிக் காண முடியும் ? புதுச்சொல்லாக்கத்தில் ஐம்புலன்கள் குறித்த புலப்பாட்டறிவில் குழப்பியடிக்கக் கூடாது. ஐம்பொறிப்பெயர்களும் அவற்றின் வினைகளும் ஆயிரக்கணக்கான சொற்றொடர்களின் வேர்கள். அங்கே எதற்கு இவ்வளவு நீட்டல்கள், முழக்கங்கள் ? 

வானொலி என்ற சொல் முதலில் தோன்றியது. வானினின்று வந்த ஒலி. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாய் அவ்வளவு இலக்கணச் செம்மையுடைய புதுச்சொல். வானொலிக்குரியது ஒலிபரப்பு. அடுத்து காணொளி – வினைத்தொகை. காணொளிக்குரியது ஒளிபரப்பு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பு. வானொலியில் ஒலிபரப்பு. 

வானொலி – காணொலி என்னும் பழைய மனமயக்கமும் இங்கே வேலை செய்கிறது. தொலைக்காட்சியில் படத்தைக் காண்பதோடு ஒலியைக் கேட்கிறோமே, அதனால் காண்கின்ற ஒலி என்று கொள்வது தகாதா ? அதுவும் இயலாது. ஏனென்றால் தமிழில் ஒரு சொற்றொடரின் இறுதியாய் அமையும் சொல்லே பொருட்சுமை ஏற்கவேண்டும். இரண்டு சொற்கள் சேர்கின்றன என்றால் அங்கே இரண்டாம் சொல்லுக்குத்தான் பொருள் வலிமை. அதுவே இறுதிப்பொருள். 

செந்தாமரை, வட்டக்கல், பள்ளிக்கல்வி – எந்தச் சொற்சேர்க்கையிலும் இரண்டாம் சொல்லே இறுதியாய்ச் சொல்ல வரும் சொல்லாகும். முதற்சொல் வெறும் முன்னொட்டாகவே நிற்கும். காண் ஒலி என்று படக்காட்சியைக் குறிக்கத் தோன்றிய சொல்லில் ஒலியை இரண்டாம் சொல் ஆக்குகிறீர்கள். படக்காட்சியைப் பற்றிய சொல்லில் ஒலி என்பதிலா முதற்பொருளாய்ப் பொருட்சுமை ஏற்றுவீர்கள் ? அதுவா தமிழ் அடிப்படை ? உம்மைத் தொகையில்கூட தமிழ் மூவேந்தர்களைக் குறிக்கையில் சேர சோழ பாண்டியன் என்கிறோம். பாண்டியன் மூன்றாவதாய் வருகிறான். அவனே தலையாய தமிழ்மன்னன். தமிழ்ச் சங்கம் கண்டவன். 

ஆங்கிலத்தில் தலையையும் வாலையும் வெட்டி ஒட்டி அதனைப் புதுச்சொல் என்பார்கள். முதலில் Audio என்பார்கள். அது கேட்கும் தன்மையிலானது. சரி. அடுத்து Visual Audio என்றார்கள். அதாவது Video. ஆடியோவில் dio. வீடியோவில் Deo. அவர்கள் Audible visual என்று ஆக்குவதற்கு இடமில்லை. நமக்கு எல்லாமே இரண்டாம் சொல். அவர்களுக்கு எல்லாமே முதற்சொல். Branch of Tree ஆங்கிலம். மரக்கிளை தமிழ். 

தமிழ் இயல்புகளோடு ஆங்கிலச் சொற்களைப் பரப்பி வைத்து ஒப்பிட்டால் மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாமே தவிர, தமிழ்ச் சொற்களின் அடிப்படைக்கு அருகில்கூட வரமுடியாது. அது நமக்குத் தேவையுமில்லை. 

அதனால் காணொலி என்பது தமிழியற்கைக்குப் பொருந்தாத பிழைப்பயன்பாடு. காணொளி என்பதே சரி என்று உணர்க. ஆள்க !