திருமணமாகி 11 மாதம்..! தந்தை வீட்டில் சடலமாக தொங்கிய புதுமணப் பெண்! ஒட்டன் சத்திரம் திகுதிகு!

வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அருகே பண்ணைப்பட்டி என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு பிரம்மசாமி என்பவர் விவசாயியாக பணியாற்றி வந்தார். இவருடைய மகளின் பெயர் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் வயது 24. முத்துலட்சுமிக்கு பட்டைய கவுண்டன்புதூர் எனும் இடத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவருக்கும் 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

லக்ஷ்மணன் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முத்துலட்சுமி மாமியார் மற்றும் மாமனாருடன் வசித்து வந்துள்ளார்.   பொங்கல் விழாவுக்காக முத்துலட்சுமியை பிரம்மசாமி வீட்டிற்கு அழைத்துள்ளார். தாய் வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி மிகுந்த சோகத்துடன் காணப்பட்டு வந்தார். இதனிடையே நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக முத்துலட்சுமியின் சகோதரரான பிரகாஷ் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது முத்துலட்சுமியை லட்சுமணன் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

பொங்கலுக்கு தாய் வீட்டிற்கு அனுப்பிய போது " 2 லட்சம் ரூபாய் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொண்டு வந்தால்தான் வாழ இயலும்" என்று மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். தன்னுடைய பெற்றோருக்கு இது மிகுந்த சுமையை தரும் என்பதை உணர்ந்து முத்துலட்சுமி வேறுவழியின்றி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறையினர் லட்சுமணன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 11 மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் புகாரை ஆர்.டி.ஓ அதிகாரி விசாரித்து வருகிறார். இந்த சம்பவமானது ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.