அரசு பள்ளி மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு..! முதல்வர் ஆலோசனையில் நீட் தேர்வுக்குப் பயிற்சி.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் மருத்துவ படிப்புகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்ற நோக்கில் நீட் தேர்வுக்கு அவர்கள் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகளை பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுஅந்த பயிற்சி வகுப்புகளில் 8 ஆயிரத்து 132 மாணவ-மாணவிகள் சேர்ந்து படித்தனர். இவர்களில் நீட் தேர்வில் 1,633 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டது. அதில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் சுமார் 740-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து இருக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர்.

அந்த வகையில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலமே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நவம்பர் 1-ந் தேதி (நேற்று) முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பிப்பதால் வகுப்புகள் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மடங்கு மாணவ-மாணவிகள் இலவச பயிற்சி பெற விண்ணப்பித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரிலே இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.