தாரா தேவியின் அருள் பெற வேண்டுமா? தாந்திரிக வழிபாட்டு வழிமுறைகள்!

பாரதத்தின் ஆன்ம மார்க்கங்களில் ஒன்றான சக்திபாதையின் தேவதைகள் வீற்றிருக்கும் இடங்கள் சக்திபீடங்கள்.


அவற்றுள் முக்கியமான ஒரு பீடம் மேற்கு வங்கத்திலுள்ள தாராபீடம். அன்னை தாரா அங்கு கொலுவீற்று இருக்கிறார். மிகமுக்கியமான தாந்திரிக வழிபாட்டு தலம் இது.

தந்தையால் அவமதிக்கப்பட்ட சதி யோககுண்டத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள, மனைவியின் மரணத்தால் விரக்தியுற்ற சிவபெருமான் தன் ருத்திரதாண்டவத்தை தொடங்கினார். இதனால் உலகம் அழியும் சூழல் உருவானது. நிலைமை கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சதியின் உடலை பல துண்டுகளாக்கி பூமியில் பல பகுதிகளில் விழச்செய்தார். சதியின் கண் வந்து விழுந்த இடமே தாராபீடம். தாரா என்ற சொல்லுக்கு கண் என்றும் ஒரு பொருள் உண்டு.

தாராபீடத்தில் அன்னையின் கோவிலின் அருகேயே தாந்திரீக சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்ய மயானம் அமைந்துள்ளது. மகாசமாஷனா என்று அழைக்கப்படும் இந்த மயானம் அன்னை தாரா நடமாடும் இடம். அன்னையின் உக்கிரத்தை தணிவிக்கும் பொருட்டு தினமும் பலிகளும் உண்டு இங்கு. தாந்திரீக பாதையில் ஆன்ம பயணம் மேற்கொள்ளும் யோகிகள் பலர் இங்கு தங்கி தங்கள் சாதனைகளை தொடர்ந்துவருகின்றனர்.

தாரா, புத்த சமயத்திலிருந்து சாக்த சமயத்துக்கு வந்த தெய்வம் என்று நம்பப்படுகின்றது. தாரா என்பது பத்து தாரை என்பது வடமொழியில் விண்மீனைக் குறிக்கும். தசமகா வித்யாவில் வரும் ஒரு அவதார தேவியே தாரா தேவி என்பவள். அவள் மகா சக்தியின் மூன்றாவது கண்ணாக வந்தவளாம். அவளைப் பற்றி கூறப்படும் ஒரு கதை இது.

சிவ பெருமான் ஆலகால விஷத்தை தேவர்களைக் காப்பாற்ற உண்ட பின் அது தொண்டையில் தங்கி விட்டது. அந்த விஷத்தினால் அவர் மிகவும் அவதிப்பட்டார். அந்த விஷத்தின் கடுமையினால் உடல் முழுவதும் எரியத் துவங்கியது. சாப்பிட முடியவில்லை. ஆகவே தாரா தேவி அவரை தன் மடியில் குழந்தைப் போல படுக்க வைத்துக் கொண்டு தனது மார்பில் இருந்து பாலை குடிக்க விட்டாளாம் . அதை குடித்தப் பின்னரே அவர் சாதாரண நிலைக்கு வந்தாராம்.

கல்கத்தாவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபீத் என்ற ஊரில் உள்ள தாரா தேவியின் ஆலயத்தில் சிவபெருமான் தாராவின் மடியில் குழந்தைப் போல படுத்துள்ள உருவச் சிலை உள்ளதாம். அங்கு தாரா தேவியை 5000 வருடங்களுக்கு முதலே வழிபாட்டு வந்துள்ளனர் என நம்புகிறார்கள்.

அது போல முன்னர் இருந்த பெங்காலை ( இன்று மேற்கு வங்காளம் ) ஆண்டு வந்த ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து ஹிமாசலப் பிரதேசத்தில் வேட்டைக்குப் போனபோது , அங்கு அசதியால் ஒரு காட்டில் உறங்கிவிட்டார். அப்போது அவர் கனவில் பைரவர், ஹனுமான் மற்றும் தாரா தேவி தோன்றி தாரா தேவிக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆலயம் அமைக்குமாறு கூற அவர் அவளுக்கு அங்கு ஆலயம் அமைத்தாராம்.

ஆக அந்த இரண்டு ஆலயங்களுமே அதாவது மேற்கு வங்கம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாரா தேவியின் ஆலயங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. தாரா தேவிக்கு நிலா தார தந்திரா எனும் வித்தையின் அனைத்து மர்மங்களையும், மந்திரங்களையும், தந்திரங்களையும் மகாகால பைரவரே போதித்தாராம். அந்த தந்திர வித்தையின் மந்திரங்களை உள்ளடக்கியதே மகா வித்யாவின் ஒரு யந்திரம். தாரா தேவிக்கு நான்கு கைகள்.

ஒரு கையில் வாள், இன்னொன்றில் தாமரைப் பூ, மூன்றாவதில் கத்தரி மற்றும் நான்காவதில் கமண்டலம் உள்ள கோலத்தில் காட்சி தருகிறாள். காலடியில் ஒருவன் கிடக்க அது தன்னிடம் சரண் அடைந்தவர்களின் மனத்தைக் கட்டுப்படுத்தி தன் அடியில் அடக்கி வைப்பதை குறிப்பது என்கிறார்கள்.

பார்ப்பதற்கு தாரா தேவி எத்தனை கோபமானவளாகத் தெரிகிறாளோ அத்தனை கருணை மிக்கவள். ஞானத்தைத் தருபவள். அவள் அனைத்து கிரகங்களுக்கும் தலைவரான பிரஹஸ்பதியின் குருவாம். அவளுக்கு நான்கு உருவங்கள் உண்டாம். அவை :1) லஷ்மியாக பூஜிக்கப்படும் தேவி 2) உக்ர தாரா 3) மகா உக்ர தாரா மற்றும் 4) நீல சரஸ்வதி.

தாராவின் உருவவியல், காளியை ஒத்தது. இருவருமே, சிவன் மீது நின்ற நிலையிலேயே காட்சி தருவர். எனினும் தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை.

இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.

காளியிலிருந்து தாராவை வேறுபடுத்துவது, அவள் கரங்களில் தாங்கியிருக்கும் தாமரையும் கத்தரிக்கோலும் ஆகும். தாராவின் கரங்களில், கத்தி, கபாலம், தாமரை, கத்தரிக்கோல் என்பன காணப்படும். உலக இச்சைகளிலிருந்து தன் அடியவனை வெட்டி விடுவிப்பதை, கத்தரிக்கோல் குறிக்கின்றது.