5 வருட காதல்! பிலிப்பைன்ஸ் பெண்ணை மனைவியாக்கிய அரியலூர் எலக்ட்ரீசியன்!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து இளைஞர் ஒருவர் திருமணம் புரிந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் என்னும் பகுதி உள்ளது. இதன் அருகேயுள்ள  அண்ணங்காரன் பேட்டை எனும் இடத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். சோமசுந்தரத்தின் மகனின் பெயர் வேல்முருகன். சிங்கப்பூர் நாட்டிற்கு இடம்பெயர்ந்த இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிரியா என்னும் பெண்ணுடன் இவருக்கு பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர். நெருக்கம் அதிகரித்து காதலர்களாக மாறினர். 5 ஆண்டுகளாக ஃபேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளனர்.

இருவரை பற்றியும் இருவரும் நன்கு அறிந்து கொண்டதால், திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி பிரியா பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தன் பெற்றோரிடமிருந்து சம்மதம் பெற்றார். வேல்முருகனும் அரியலூரில் உள்ள உற்றார் உறவினர்களிடம் சம்மதம் பெற்றார்.

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் புரிந்தனர். தமிழ் முறைப்படி மிகவும் எளிமையான வகையில் இந்த திருமணம் நடைபெற்றது.

மணமக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.