விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது மட்டும் இன்றி, பாதிக்கப்பட்டவர்கள் தன்னை காரில் கடத்தியதாக பெண் ஒருவர் நாடகம் ஆடிய சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது.
ஒரே நேரத்தில் பல வாலிபர்கள்..! தஞ்சை பெண்ணுக்கு சேலத்தில் அரங்கேறிய நள்ளிரவு திக் திகில் சம்பவம்!
தஞ்சையை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகள் டிம்பிள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தின் ஊழியர். இவர் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பல இளைஞர்களின் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இவரை நம்பி சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் சொன்ன நேரத்தில் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார் டிம்பிள். இதையடுத்து வேலை கிடைக்காவிட்டாலும் பரவா இல்லை. பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று இளைஞர்கள் கேட்க அவர்களை அலைக்கழித்துள்ளார். முதலில் அவர்களை சேலம் வருமாறு கூறியுள்ளார். பின்னர் பணம் கொடுப்பவர் தஞ்சையில் இருக்கிறார் அங்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய இளைஞர்கள் அந்த டிம்பிளையும், அவரது தந்தையையும் காரில் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் டிம்பிளின் தாயார் தன்னுடைய மகள் மற்றும் கணவரை சில இளைஞர்கள் காரில் கடத்திவிட்டனர் என புகார் அளித்தார். இந்த விஷயம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்களுக்கு தெரியவர உடனே அந்த பெண்ணை சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். டிம்பிளை கடத்தவில்லை என்றும் பணம் தருவதாக கூறி அவர்தான் எங்கள் காரில் வந்தார் எனவும் போலீசாரிடம் இளைஞர்கள் தெரிவித்தனர். இதை டிம்பிள் மறுத்து தன்னை கடத்திவிட்டதாக நாடகம் ஆடினார்.
இதையடுத்து டிம்பிள், அவரது தாய், தந்தை மற்றும் இளைஞர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தினர். வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசையில் வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்துள்ளதாகவும் எனவே பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு டிம்பிள் பணத்தை வாங்கவில்லை என்றும் நான் அறிமுகம் செய்து வைத்த நபரிடம்தான் இவர்கள் கொடுத்து ஏமாந்துள்ளார்கள் என கட்டுக்கதை விட்டுள்ளார்.