வெற்றிலையில் முப்பெரும் தேவிகள் சங்கமம்! நிவேதன மகத்துவம்!

வெற்றிலை இரண்டு வகைப்படும். 1.மலை வெற்றிலை 2. நீர் வெற்றிலை


வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

விருந்தினர்களுக்கும் சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும் பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை.

வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்துமதப் பண்டிகைகள் விசேஷம் விரதம் திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு.

தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலையில் பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையில் பலவிதமான பூக்கள் உண்டு அவையாவன காம்பூ ,நரம்பூ ,தலம்பூ ,மடிப்பூ,சுண்ணாம்பூ,சப்பூ,துப்பூ,சிவப்பூ வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் உணவருந்தியதும் பண்டைக் காலத்தில் வெற்றிலை பாக்குக் கொடுப்பது வழக்கம் அப்படிக் கொடுக்கும் போது விருந்தாளி வெற்றிலை வட்டாவில் இருந்து முதலில் எதை எடுப்பாரோ அதிலிருந்து அவரின் குணநலன் எல்லாவற்றையுமே முன்னோர்கள் தெரிந்து கொள்வார்கள்

இப்பொழுதும் எமது நடை முறையில் வெற்றிலை பாக்கு வைத்துக் கேட்பது எனும் ஜோதிட வழக்கம் உள்ளது. நீங்கள் ஜோதிடரிடம் கொண்டு செல்லும் வெற்றிலை ஒற்றை வளமுள்ளதா அல்லது இரட்டை வளமுள்ளதா எனப் பிரித்துப் பார்த்தால் ஜோதிடர் புரிந்து கொள்வார். அதில் எத்தனை வெற்றிலை பழுதானவை என்பதில் இருந்து பிரித்துப் பார்த்து கிரகங்களைக் கணித்துக் கொள்வார்

மங்கள நிகழ்வுகள் அனைத்துக்குமே வெற்றிலை இதனால்தான் பயன்படுத்துகிறார்கள். இன்றும் சிங்களவர்கள் சமூகத்தில் எந்த அளவு உயர்ந்தவராக இருந்தாலும் வெற்றிலை கொடுத்தே முதல் வரவேற்பளிப்பர்.