இந்தியாவுக்குள் நுழைந்து குண்டு வீசிய பாக்., விமானம்! துரத்தி துரத்தி அடித்த இந்திய விமானப்படை!

எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீநகர் : இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், எங்களுடைய திறமையை காண்பிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். தாக்குதல் நடத்துவது எங்களது பாதுகாப்பு மற்றும் உரிமை என அவர் தெரிவித்தார். மேலும் தாக்குதலை தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, அதே நேரத்தில் எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமிர்தரசிலும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

டெல்லி : எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் ‘ரா’ அமைப்பின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இஸ்லாமாபாத் : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவையை நிறுத்திவைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. லாகூர், முல்தான், ஃபைசலாபாத், இஸ்லாமாபாத், சியால்காட் விமான நிலையங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் : பாக்., போர் விமானங்கள் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியதாக பாக் அறிவித்து இருந்த நிலையில் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய விமானங்கள் எதையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், இந்திய விமானிகள் யாரையும் பாகிஸ்தான் கைது செய்யவில்லை என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி : தீவிரவாத தலைவர்களை அமெரிக்கா போல் இந்தியாவாலும் தாக்க முடியும் என அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், எது வேண்டுமானலும் நடக்கலாம் என்றும், பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்