ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி! தண்ணீருக்கு தட்டுப்பாடு! எதிரத்து போராடிய சமூக ஆர்வலர் மகனுடன் கொடூர கொலை! பதற வைக்கும் சம்பவம்!

கரூர்: ஏரியை மீட்டெடுக்க போராடிய சமூக ஆர்வலரும், அவரது தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மகன்  நல்லதம்பி. சமூக ஆர்வலரான நல்லதம்பி, சுற்றுப்பகுதிகளில் நிலவும் பொதுப் பிரச்னைகளில் அக்கறை காட்டியுள்ளார்.

குறிப்பாக, முதலைப்பட்டியில் உள்ள 40 ஏக்கர் மதிப்பிலான ஏரியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் நீர் தட்டுப்பாடு ஏற்படவே, நல்லதம்பி, அவரது தந்தை தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இதுதவிர, நல்லதம்பி இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றும் தொடர்ந்திருக்கிறார். இதன்படி, விசாரணை நடத்திய நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை மீட்கும்படி வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதில், ஆக்கிரமிப்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 30) வயலில் இருந்து  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நல்லதம்பியையும், அவரது தந்தையையும் மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து சராமரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் முதலைப்பட்டி கிராமத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.