டேட்டா திருட்டு விசாரணை! சுந்தர் பிச்சையை கதற வைத்த அமெரிக்க எம்.பிக்கள்!

கூகுள் நிறுவனம் தனிப்பட்ட நபர்களின் அனைத்து விவரங்களையும் திருடி தனது வணிகத்தை பெருக்குவதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையின் போதுஅமெரிக்க எம்.பிக்கள் சிலர் கேட்ட கேள்விகளால் சுந்தர் பிச்சை விழிபிதுங்கிப் போனார்.


    உலகம் முழுவதும் இணையதளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று கூகுள். தற்போது கூகுள் இல்லை என்றால் இணையதளமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது. எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாடுவது கூகுள் செர்ச் என்ஜினைத்தான். இதனை பயன்படுத்தி தான் கூகுள் நிறுவனம் தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்பு, செயல்பாடுகளை அறிந்து வணிகத்தை மேம்படுத்துவதாக புகார் எழுந்தது.

   தனிப்பட்ட நபர்களின் உடல் இயக்கம், அவர்கள் பயன்படுத்தும் மருத்துவமனை, பயன்படுத்த விரும்பும் ஓட்டல் உள்ளிட்டவற்றை கூட கூகுள் தெரிந்து வைத்திருப்பது அமெரிக்கர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளிக்க வந்தால் என்ன ஆகும் என்பது தான் அமெரிக்க மக்களின் தற்போதைய பெரிய அச்சம். இந்த அச்சத்தை போக்க கூகுளை விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

   இதனை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை விசாரணைக்கு அழைத்தது. சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது விசாரணைக்குழுவில் இருந்த எம்.பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாக சுந்தர் பிச்சை பதில் அளித்தார். ஆனால் எம்.பிக்கள் ஐந்து பேர் கேட்ட விசித்திரமான கேள்வி சுந்தர் பிச்சயை விழிபிதுங்க வைத்தது. அந்த ஐந்து கேள்விகளையும், அதற்கு பிச்சை அளித்த பதிலையும் இப்போது பார்க்கலாம்.   இடிட் என்று கூகுளில் தேடினால் ஏன் டொனால்ட் டிரம்ப் வருகிறார்? என்று ஜனநாயக கட்சியின் எம்.பி., ஜோ லாஃப்கிரன் கேள்வி எழுப்பினார். அரசியல் காரணங்களுக்காக கூகுளில் பணியாற்றும் நபர் எவரேனும் இப்படி செட் செய்து வைத்துள்ளாரா என்றும் அவர் கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே கூகுள் பிச்சை பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

   செர்ச் என்ஜினில் நீங்கள் தேடப்பயன்படுத்தும் கீ வேர்டானது அதோடு தொடர்புடைய அதிக பிரபலமான மற்றும் புதிய அம்சங்களைத்தான் காட்டும். அந்த அடிப்படையில் இடியட் என்றும் எண்ணற்றவர்கள் டிரம்ப்பை தங்களது இணையதளப்பக்கங்களில் குறிப்பிட்டு வைத்திருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று பிச்சை பதில் அளித்தார்.

   இரண்டாவதாக குடியரசு கட்சியின் எம்.பி., டெட் போ கூகுள் நிறுவனம் நான் நடப்பது, நகர்வதை அறிந்து வைத்திருக்குமா இல்லையா? என்றார். அதற்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை விரிவாக பதில் அளிக்க முனைந்தார். ஆனால் அதனை ஏற்க டெட் போ மறுத்துவிட்டார். நான் மிக எளிதான ஒரு கேள்வியை கேட்டேன். நான் நடப்பது, நகர்வதை கூகுள் தெரிந்து கொள்ளுமா? கொள்ளாதா? இதற்கு ஆம், இல்லை என்று பதில் சொல்லுங்கள் என்றார் டெட் போ.   இதனால் சற்று தடுமாறிய கூகுள் பிச்சை ஆம், இல்லை என்று இந்த கேள்விக்கு பதில் அளிப்பது கடினம் என்று விழிபிதுங்கினார். இதனால் சற்று நிதானம் இழந்த எம்.பி., டெட் போ, நான் கடினமான கேள்வியை எல்லாம் கேட்கவில்லை, வருடத்திற்கு 700 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உங்களால் இந்த ஆம், இல்லை என்கிற கேள்விக்கு பதில் அளிக்க முடியாதா? என்று ஆவேசம் ஆனார்.

   இதனால் கலங்கிப் போன சுந்தர் பிச்சை, கூகுள் இயல்பாக யாருடைய நடமாட்டத்தையும் கண்காணிப்பதில்லை. ஆனால் செட்டிங்களை மாற்றியும், சில ஆப்களை இன்ஸ்டால் செய்தும் நீங்கள் வைத்துக் கொண்டால் உங்கள் நடமாட்டத்தை கூகுளால் அறிந்து கொள்ள முடியும் என்று பதில் அளித்து பிரச்சனையை முடித்தார். அடுத்ததாக எம்.பி ஒருவர் கேட்ட கேள்வி தான் சுந்தர் பிச்சையை நிலைகுலைய வைத்தது.

   குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் கிங் எனும் எம்.பி, தன்னுடைய பேத்தி எனது செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த போது என்னை பற்றி வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான செய்திகள் ஐ போன் டிஸ்பிளேவில் வருகிறது என்றார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுந்தர் பிச்சை, எம்.பி அவர்களே ஐபோன் வேறு ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது அதற்கு நான் எப்படி பதில் சொல்வது என்று பரிதாபமாக பதில் கேள்வி கேட்டார்.

   குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் கோஹன் எனும் எம்பி, இந்த வாரம் தான் எம்.எஸ்.என்.பி.சி சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்ததாகவும், பேட்டியை முடித்துவிட்டு வந்த கூகுளில் தேடிய போது அந்த பேட்டி இல்லை என்றும் தெரிவித்தார். இதற்கு என்ன காரணம் என்றும் அந்த எம்.பி சுந்தர் பிச்சையிடம் கேட்டார். இதனால் சற்று பதற்றம் அடைந்த சுந்தர் பிச்சை, நீங்கள் சரியான கீ வேர்ட் கொடுத்திருந்தால் அந்த பேட்டி வந்திருக்கும் என்ற பதில் அளித்தார்.

   குடியரசு கட்சியை சேர்ந்த லேமர் ஸ்மித் எனும் எம்.பி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் செர்ச் என்ஜினில் மோசடி செய்து செர்ச் ரிசல்ட்டை மாற்றும் ஊழியர் உங்கள் நிறுவனத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்றார். இதனை கேட்டு பதற்றம் அடைந்த சுந்தர் பிச்சை தனக்கு அருகே இருந்த தண்ணீரை எடுத்து பருகிவிட்டு, அப்படி எல்லாம் எங்கள் நிறுவனத்தில் யாரும் இல்லை என்றார்.

   மேலும் குறிப்பிட்ட ஒரு நபரால் செர்ச் என்ஜின் ரிசல்ட்டை மாற்ற முடியாது என்றும் அது ஒரு கணக்கீடு என்றும் அதனை அவ்வளவு சுலபமாக புரிந்து கொண்டு மாற்றுவது முடியாத காரியம் என்றும் சுந்தர் பிச்சை பதில் அளித்தார். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே சுந்தர் பிச்சை அசவுகரியத்தை உணர்ந்தார்.

   மற்றபடி பெரும்பாலான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை இயல்பாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். மேலும் கூகுள் நிறுவனத்திற்குசிக்கலை ஏற்படுத்தும் வகையில் எந்த கேள்விகளுக்கும் சுந்தர் பிச்சை பதில் அளிக்கவில்லை. மாறாக எம்.பிக்கள் கேட்ட சில கேள்விகள் தான் அவர்களுடைய அறியாமையை காட்டுவதாக இருந்தது.