கேட்ட தொகுதிகளுக்கு நோ சொன்ன தி.மு.க! கூட்டணியில் இருந்து விசிக – மதிமுக வெளியேற முடிவு!

கேட்ட தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் தி.மு.க கூட்டணியில் இருந்து விலக வி.சி.க மற்றும் ம.தி.மு.க கட்சிகள் வெளியேற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் தான் கூட்டணி என்று ம.தி.மு.கவும், விசிகவும் கடந்த ஓராண்டாகவே கூறி வருகின்றன. ஆனால் தி.மு.க தரப்போ ம.தி.மு.க மற்றும் வி.சி.க கட்சிகள் தோழமை கட்சிகள் தான் என்றும் தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு என்றும் கூறி வந்தன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை காங்கிரசுடன் தி.மு.க இறுதி செய்துவிட்டது. இதே போல் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கும் ஒரு தொகுதியை உதய சூரியன் சின்னத்தில் ஒதுக்கியுள்ளது தி.மு.க

ஆனால் ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது. இதற்கு காரணம் மதிமுக 4 தொகுதிகள் கேட்கிறது. வி.சி.க 2 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் தி.மு.க தரப்போ இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி என பிடிவாதம் காட்டுகிறது.

அதிலும் வி.சி.கவோ விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது போல் பேசுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தி.மு.கவோ விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதி மட்டும் தான் வி.சி.கவுக்கு என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திருமாவளவன் கூறியுள்ளார். கூட்டணி பேச்சு முடிவதற்குள் சிதம்பரம் தொகுதி தனக்கு என திருமா கூறியதை தி.மு.க ரசிக்கவில்லை.

இதே போல் நான்கு தொகுதிக்கு எல்லாம் மதிமுக ஒர்த் இல்லை என்பது தி.மு.கவின் திண்மமான எண்ணம். எனவே ஈரோடு மட்டும் மதிமுகவிற்கு ஒதுக்க தி.மு.க முன்வந்துள்ளது. ஆனால் காஞ்சிபுரம், தேனி மற்றும் தென்காசி தொகுதியை வைகோ கோரி வருகிறார்.

வைகோவும் சரி திருமாவளவனும் சரி கூட்டணி பேச்சை சுமூகமாக்கும் வகையில் செயல்படவில்லை என்று தி.மு.க கருதுகிறது. மேலும் அடுத்த கட்ட பேச்சுக்கும் இரண்டு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும் தாங்களாக சென்று தி.மு.கவுடன் பேசவும் இரண்டு கட்சிகளும் தயாராக இல்லை என்கிறார்கள். எனவே தி.மு.க கொடுக்கும் ஒரு தொகுதிக்காக அங்கிருப்பதை விடகூடுதலாக கொடுக்கும் கட்சிகளுடன் இணைந்து கொள்ள விசிக மற்றும் திருமா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.