60ம் கல்யாணத்தை முடித்துவிட்டு திரும்பிய தொழில் அதிபர்! புளியமரத்தில் மோதிய கார்! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்!

60-வது திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த தொழிலதிபர் கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவமானது ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. ஆத்தூருக்கு அருகே தம்மம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி சேகர். இவருடைய வயது 60. இவர் ஒரு நகைக்கடை தொழிலதிபராவார். இவருடைய மனைவியின் பெயர் சுகந்தி. சுகந்தியின் வயது 58. இத்தம்பதியினருக்கு பவித்ரா, துர்கா என்று 2 மகள்கள் உள்ளனர். கார்த்திக், சந்தோஷ்பாபு ஆகியோர் மருமகன்களாவர்

நாகமணி சேகர் தன்னுடைய 60-வது கல்யாணத்தை குடும்பத்தினருடன் திருக்கடையூர் திருத்தலத்தில் கொண்டாடினார். அனைத்து நிகழ்சிகளையும் முடித்துவிட்டு நேற்றிரவு திருக்கடையூரில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டி சென்றார்.

அதிகாலை 3 மணியளவில் கார் ஆத்தூர் அருகேயுள்ள கீரிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராவிதமாக கார்த்திக்கின் கட்டுப்பாட்டிலிருந்து கார் முழுவதுமாக விலகி சென்றது. காரானது தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே, நாகமணி சேகர் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழந்த நாகமணிசேகரின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டியது விபத்து நேரிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.