ஓட்டை சைக்கிள்..! மதுரை டூ தேனி..! மிதியாய் மிதித்து சென்ற அண்ணன்! எல்லாம் தங்கைக்காக..!

செவிலியராக பணியாற்றி வரும் தன்னுடைய தங்கையை அழைத்து செல்வதற்காக 80 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அண்ணன் வந்த சம்பவமானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


மதுரையில் உள்ள கூடல் நகருக்கு அருகில் அமைந்துள்ள தினமணி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு பிரவீனா மற்றும் ஜீவராஜ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில், மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைத்தார்.

தற்போது பிரவீனா தேனி அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் அவரால் மதுரைக்கு வர இயலவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் உடல்நிலை மோசமானது. தன்னுடைய மகனிடம் பிரவீனாவை சந்திக்க வேண்டுமென்று ஆசையாக கேட்டுள்ளார்.

உடனடியாக ஜீவராஜ் தன்னிடமிருந்த பழுதடைந்த சைக்கிளில் தேனி செல்ல முடிவெடுத்தார். தன் கையிலிருந்த காற்று பம்பை  எடுத்துக்கொண்டு புறப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு டயர்களில் இருந்து காற்று அனைத்தும் வெளியேறியது. உடனடியாக தன்னிடமிருந்த பம்ப் மூலம் காற்றடித்து, தேனிக்கு விரைவாக புறப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு சகோதரி வேலை பார்க்கும் மருத்துவமனையின் வாசலில் உள்ள நிழற்குடையில் தங்கினார். பொழுது விடிந்தவுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று தங்கையை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நிர்வாகத்தினரோ மாவட்டம் தாண்டி செல்வதற்கு தகுந்த உரிமை இல்லாமல் அனுப்ப இயலாது என்று கூறியுள்ளனர். ஜீவராஜ் தன்னுடைய நிலைமையை எடுத்துக்கூறி மருத்துவமனை நிர்வாகத்தினரை சம்மதிக்க வைத்தார்.

அங்கிருந்து இருவரும் சைக்கிளில் புறப்படுவதை பார்த்த காவல்துறையினர் விசாரித்தனர். தங்கையை அழைத்து செல்வதற்கு அண்ணன் 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பழுதடைந்து சைக்கிளில் வந்திருப்பதை கேட்ட காவல்துறையினர் கண்கலங்கினர். அங்கிருந்து செய்து இருவரையும் பத்திரமாக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது மருத்துவமனை நிர்வாகிகளை பெரிதளவில் வியக்கவைத்தது.